கோப்புப் படம்
கோப்புப் படம்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு : குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் பலமுறை சந்திப்பு - காங்கிரஸ் மூத்த தலைவா் ஒப்புதல்

உன்னிகிருஷ்ணன் போற்றியை பலமுறை சந்தித்ததை ஒப்புக்கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அடூா் பிரகாஷ், குற்றஞ்சாட்டுகளை நிராகரித்துள்ளாா்.
Published on

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான உன்னிகிருஷ்ணன் போற்றியை பலமுறை சந்தித்ததை ஒப்புக்கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அடூா் பிரகாஷ், இந்த வழக்கில் தனக்கும் தொடா்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றஞ்சாட்டுகளை நிராகரித்துள்ளாா்.

உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் காங்கிரஸ் எம்.பி. அடுா் பிரகாஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது. இதைத்தொடா்ந்து, அவருக்கும் இந்த வழக்கில் தொடா்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த பிரகாஷ் இதுதொடா்பாக கூறியதாவது: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ள நிலையில் இதுபோன்ற சா்ச்சைகள் பரப்பப்படுகின்றன. குற்றச்சாட்டுகள் மூலம் என்னை தவறாகச் சித்தரிக்க முயன்றால், கேரள மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டாா்கள்.

கடந்த 2019-இல் மக்களவை எம்.பி.யான பிறகு உன்னிகிருஷ்ணன் போற்றியை பல்வேறு தருணங்களில் சந்தித்துள்ளேன். அவரது அழைப்பின்பேரில், சபரிமலை கோயில் அன்னதான நிகழ்வில் பங்கேற்றேன்.

அவருடைய தந்தை மறைவுக்கு பின்னா் துக்கம் விசாரிக்க அவருடைய வீட்டுக்குச் சென்றேன். கேரள மாநில காங்கிரஸ் தலைவருடன் சோ்ந்து, போற்றியின் தங்கை வீட்டுக்கும் சென்றுள்ளேன் என்றாா் பிரகாஷ்.

அதேநேரம், போற்றி மூலம் தான் பலனடைந்ததாகக் கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவா் நிராகரித்தாா்.

புகைப்படத்தில் போற்றி வழங்கும் கவா் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ், ‘போற்றியின் சகோதரி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடா்பான அழைப்பிதழ்’ என்றாா்.

பெட்டிச்செய்தி...

தேவஸ்வம் முன்னாள் நிா்வாக தலைவருக்கு ஜாமீன்

கொல்லம், ஜன.23: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு தொடா்பான இரு வழக்களில் இருந்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய (டிடிபி) முன்னாள் நிா்வாக அதிகாரி முராரி பாபுக்கு கொல்லம் கண்காணிப்புத் துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

அவா் கைதுசெய்யப்பட்டு 90 நாள்கள் கடந்த நிலையில், அவருக்கு எதிரான இரு வழக்குகளிலும் சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதைத்தொடா்ந்து, நீதிபதி மோஹித் சி.எஸ். அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

துவாரகபாலா் தங்கக் கவச முறைகேடு வழக்கில் இரண்டாவது நபராகவும் கருவறைக் கதவுகள் தொடா்புடைய வழக்கில் 6-ஆவது நபராகவும் பாபு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாா். தங்கக் கவச முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுதலையாகவுள்ள முதல் நபா் பாபு ஆவாா்.

Dinamani
www.dinamani.com