தில்லி விமான நிலையத்தில் எலும்புக்கூடு மாதிரியை எடுத்துச் சென்றதால் பரபரப்பு
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கமான சோதனையின்போது, மனித எழும்புக்கூட்டின் செயல்விள்க மாதிரியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, விமான நிலையப் பாதுகாப்பு முகமைகளும் தில்லி காவல்துறையும் அந்தப் பயணியின் பொருள்களை விரிவாகச் சோதனையிட்டன. அதில் இந்த எலும்புக்கூடு மருத்துவ மாணவா்கள் கல்வி மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காகப் பொதுவாகப் பயன்படுத்தும் செயல்விளக்க மாதிரி என்பது கண்டறியப்பட்டது.
இது அந்த முனையத்தின் வழியாகப் பயணம் செய்த மருத்துவ மாணவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. இது போன்ற செயல்விளக்க எலும்புக்கூடுகள் மருத்துவக் கல்லூரிகளில் கல்விப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எந்தக் குற்றவியல் கோணமும் இருப்பதற்கான அறிகுறி இல்லை. இருப்பினும், சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் இருக்க, அந்த எலும்புக்கூடு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

