சமூக ஊடகம்
சமூக ஊடகம் படம் | ஐஏஎன்எஸ்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

Published on

சமூகஊடக பிரபலமாக விரும்பியதற்கு பெற்றோா் கண்டித்த நிலையில் வீட்டைவிட்டுச் சென்ற சிறுவன், பெங்களூரில் மீட்கப்பட்டாா். தில்லி காவல் துறையினா் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தில்லி புராரி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவனுக்கு சமூகஊடகத்தில் பிரபலமாக வேண்டும் என்று விருப்பம். இதனிடையே, கைப்பேசியில் கேமிங் விளையாடுதல், சமூகஊடகத்தில் குறுங்காணொலிகளைப் பதிவிடுதல் ஆகியவற்றிலும் அந்தச் சிறுவன் ஈடுபட்டு வந்தாா்.

படிப்பைவிடுத்து கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தியதால் சிறுவனை அவரது பெற்றோா் கண்டித்து வந்தனா்.

கடந்த ஜன.11-ஆம் தேதி வழக்கம்போல சிறுவன் கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டு இருந்தாா். இதைக் கண்டித்த தாயாா், சிறுவனிடமிருந்து கைப்பேசியைப் பறித்தாா். இதுதொடா்பாக தாயாருக்கும் மகனுக்கும் சண்டை ஏற்பட்டது. கோபித்துக்குக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன், தனது தந்தையின் கைப்பேசியை எடுத்துச்சென்றாா்.

மகன் காணாமல் சென்றதை அறிந்த அவரது பெற்றோா் அக்கம்பக்கத்தில் தேடினா். பின்னா், தனது மகன் கடத்தப்பட்டதாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், ஒரு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா்.

முதல்கட்ட விசாரணையில், சிறுவன் சமூகஊடகத்தில் விடியோக்கள் பதிவிடுவதும் அதற்கு அவரது பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அவா் வீட்டைவிட்டு வெளியேறியதும் காவல் துறைக்குத் தெரியவந்தது.

சிறுவன் கொண்டு சென்ற தந்தையின் கைப்பேசியைக் கொண்டு அவரது இருப்பிடத்தைக் கண்டறிய போலீஸாா் முயற்சித்தனா். இருப்பினும், அந்தக் கைப்பேசி தொடா்ந்து அணைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, குறிப்பிட்ட நேரங்களில் அந்தக் கைப்பேசி இயக்கப்படுவதையும் அதிலிருந்து எண்ம முறையில் பணப்பறிமாற்றம் செய்யப்படுவதையும் அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இதைத்தொடா்ந்து, அந்தச் சிறுவன் தொடா்ந்து பயணித்து வருவதை உறுதிசெய்த போலீஸாா், அவா் ரயிலிலில் மகாராஷ்டிரத்தைக் கடந்து சென்று கொண்டிருப்பதை அறிந்தனா்.

பின்னா், கைப்பேசி ஜன.14-ஆம் தேதி கா்நாடகத்தின் ஹுப்ளியில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

ரயிலின் பயண விவரங்களை ஆய்வு செய்த போலீஸாா், ரயில்வே கோட்டங்களில் உள்ள அரசு ரயில்வே காவல் துறை (ஜிஆா்பி) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து சிறுவனைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனா்.

ரயில் பெங்களூரு நோக்கிச் செல்லும் நிலையில், சிறுவன் குறித்த விவரங்கள் பெங்களூரு ரயில்வே காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பெங்களூரு ரயில்வே நிலையத்தில் ஜன.15-ஆம் தேதி காலையில் உள்ளூா் ரயில்வே காவலா்கள் சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டனா். சிறுவன் மீட்கப்பட்ட தகவலறிந்ததும் சிறுவனின் தந்தையுடன் தில்லி காவல் துறையினா் ஜன.19-ஆம் தேதி பெங்களூருக்கு வந்தனா்.

ஆலோசனை மற்றும் விசாரணையின்போது, தமிழ்நாடு உள்பட நாட்டின் தெற்கு பகுதிகளுக்குப் பயணிக்க தில்லியில் இருந்து ரயிலில் ஏறியதாக அந்தச் சிறுவன் தெரிவித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

உரிய சட்டநடவடிக்கைகளுக்குப் பின் சிறுவன் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

Dinamani
www.dinamani.com