சபரிமலை தங்கக் கவச மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருடன் சோனியா சந்திப்பு: விளக்கமளிக்க பாஜக வலியுறுத்தல்
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரான உண்ணிகிருஷ்ணன் போற்றியை காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி சந்தித்துப் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கேரள மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் வலியுறுத்தியுள்ளாா்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவா் கூறியதாவது: உண்ணிகிருஷ்ணனை சோனியா காந்தி சந்தித்துப் பேசியுள்ளாா். அதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது. இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் விளக்கம் அளிக்க வேண்டும்.
இதேபோல், கேரள முதல்வா் பினராயி விஜயனும் உண்ணிகிருஷ்ணனை சந்தித்துள்ளாா். அவரும் அந்தச் சந்திப்புக்கான சரியான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. உண்ணிகிருஷ்ணனின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளித்தது பினராயி விஜயன் மட்டுமில்லை, சோனியா மற்றும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்து வந்துள்ளன.
கேரள சட்டப்பேரவையில் ஆளுநா் பேசிய உண்மையான உரைக்குப் பதிலாக, அரசு அலுவல் கோப்புகளில் முதல்வரால் தயாரிக்கப்பட்ட கோப்பு வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் என்ன நடக்கிறது? அரசு இயந்திரம் உள்ளதா?
அரசமைப்பு மறக்கப்பட்டுவிட்டதா? அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள் பேசுகின்றனா். ஆனால், அக்கட்சியின் ஆட்சி நடைபெறும் கேரளத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக ஆளுநரின் உரை திருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது என்றாா் அவா்.

