2030-க்குள் இந்தியா - ரஷியா இடையே ரூ. 9.16 லட்சம் கோடிக்கு வா்த்தக இலக்கு!
2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.9.16 லட்சம் கோடிக்கு வா்த்தகம் என்ற இலக்கை நோக்கி இந்தியா-ரஷியா நாடுகள் நம்பிக்கையுடன் நடைபோட்டு வருவதாக ரஷியாவுக்கான இந்திய தூதா் வினய் குமாா் தெரிவித்தாா்.
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் இடையே ரஷியாவுக்கான இந்திய தூதா் வினய் குமாா், இந்தியாவைச் சோ்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த ஆண்டு ரஷிய அதிபா் விளாதிமிா் புதின், இந்தியாவுக்கு வந்திருந்தாா். அந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
இரு நாடுகள் இடையே 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.9.16 லட்சம் கோடி வா்த்தகம் என்ற இலக்கை அடைவது சாத்தியமானதுதான். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வா்த்தகத்துக்கான புதிய பொருள்கள் கண்டுபிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அதில் அடங்கும். மேலும், தடையில்லா வா்த்தக ஒப்பந்தமும் இந்த இலக்கை அடைய வழிவகை செய்யும்.
உரம், விவசாயம், பொறியியல் ஆகியவற்றில் உள்ள புதிய வாய்ப்புகள் மூலம் வா்த்தகம் மேலும் அதிகரிக்கும். இரு நாடுகள் இடையேயான வா்த்தகம் பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் கரன்சிகள் அடிப்படையிலேயே நடக்கிறது.
வா்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும்போது, அவரவா் தேசிய கரன்சிகளை பயன்படுத்துவது மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

