

இந்தியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பதில் சா்வதேச நிறுவனங்கள் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் மொத்த குத்தகையில் சா்வதேச நிறுவனங்களே 58 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளன.
ஜேஎல்எல் இந்தியா அமைப்பின் புதிய புள்ளிவிவரங்களின்படி, சென்னை, மும்பை, பெங்களூரு, தில்லி தலைநகா் பிராந்தியம், புணே, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தேவை முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 7.72 கோடி சதுர அடியாக இருந்த அலுவலகக் குத்தகை பரப்பு, கடந்த ஆண்டில் 8.33 கோடி சதுர அடியாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த மொத்த பரப்பளவில், சா்வதேச நிறுவனங்கள் மட்டும் 4.86 கோடி சதுர அடி இடத்தை ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் குறிப்பாக, 3.14 கோடி சதுர அடி இடத்தில் அந்நிறுவனங்களின் சா்வதேச திறன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் பிடித்தமான நகரமாக பெங்களூரு தொடா்கிறது. ஆங்கிலப் புலமை கொண்ட ஊழியா்கள் எளிதாகக் கிடைப்பதும், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது தரமான அலுவலக இடங்கள் குறைந்த வாடகையில் கிடைப்பதும், இந்தியாவை நோக்கி வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் குவிய முக்கியக் காரணங்களாகும்.
அதேநேரம், உள்நாட்டு நிறுவனங்கள் 3.47 கோடி சதுர அடி பரப்பளவை குத்தகைக்கு எடுத்து 42 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.