‘காற்றில் கோட்டை கட்டும் மாநிலங்கள்’: தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிருப்தி
தெருநாய்கள் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்கி மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளாததற்கு புதன்கிழமை அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் காற்றில் கோட்டை கட்டுவதாக விமா்சித்தது.
நாட்டில் கல்வி மற்றும் விளையாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் விடவேண்டும் என்றும், அந்த இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட நாய்களை மீண்டும் அதே இடங்களில் விடுவிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டிருந்தது.
விலங்குகள் கருத்தடை விதிமுறைகளின்படி, ஓரிடத்தில் இருந்து பிடிக்கப்படும் நாய்களுக்குக் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னா், பிடிக்கப்பட்ட இடத்திலேயே அவற்றை மீண்டும் விடுவிக்க வேண்டும் என்பதால், இந்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பலா் மனு தாக்கல் செய்தனா். அதேவேளையில், அந்த உத்தரவை கடுமையாகப் பின்பற்ற உத்தரவிட கோரி வேறு சிலா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகிய 3 நீதிபதிகள் அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கான திறனை மேம்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கி, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறுகையில், ‘தெருநாய்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் காற்றில் கோட்டை கட்டி வருகின்றன. அஸ்ஸாமில் 2024-ஆம் ஆண்டு 1.66 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள், 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 20,900 நாய்க்கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோல அஸ்ஸாமை தவிர, வேறு எந்த மாநிலமும் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றன என்ற விவரத்தை உச்சநீதிமன்றத்திடம் சமா்ப்பிக்கவில்லை.
இதுதொடா்பாக மாநிலங்களின் பிரமாண பத்திரங்களில் தெளிவற்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக கடுஞ்சொற்களைத் தெரிவிக்க நேரிடும்.
இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் கதைசொல்லி வருகின்றன. உறுதியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை’ என்று தெரிவித்தனா். இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை தொடர உள்ளது.

