

புது தில்லி : தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் தொழிலாளர்களுக்கான நலனுக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெண் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பிற சங்கங்களால் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில் குறிப்பாக, உள்ளூர் தொழிலாளர்களை குறைந்தபட்ச ஊதிய வரம்புக்குள் கொண்டுவரும் கோரிக்கையை, மனுதாரர் தரப்பு முக்கியமாக வலியுறுத்தியிருந்தது.
மனு மீதான விசாரணையில், இத்தகைய கோரிக்கைகளுடைய மனுவை விசாரணைக்கு ஏற்பது வரவேற்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டிருப்பதாவது : “இந்த நாட்டில் எத்தனை எத்தனை தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்களால், அவர்களின் நடவடிக்கைகளால் மூடப்பட்டன என்று தெரியுமா? களத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
நாடெங்கிலும் ஆண்டாண்டுகாலமாக பாரம்பரியத்தைக் கடைப்பிடித்த அனைத்து தொழிற்சாலைகளும், மேற்குறிப்பிட்ட சங்கங்களால் மூடப்பட்டதே உண்மை.அந்தச் சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை செய்வதில் விருப்பமில்லை. நாட்டில் தொழில் வளர்ச்சி நிறுத்தப்பட இச்சங்கங்களின் தலைவர்களே முக்கிய காரணம்.
உழைப்புச் சுரண்டல் இங்கு வெளிப்படையாகவே இருக்கிறது. அதை மறுக்க முடியாது. ஆனால், அவற்றை எதிர்கொண்டு போராட வழிகள் பல உள்ளன.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மற்றுக் கருத்து இல்லை. ஆனால், தொழிற்சாலை நிர்வாகச் செயல்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் இருக்கக்கூடாது.
மக்கள் தங்களின் தனிப்பட்ட உரிமைகள் பற்றி அறிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். இது தவிர்த்து பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.