நாடு முழுவதும் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றுவதற்கான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை வெளியிட்டது.
வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள் அல்லது காயமடைந்தவா்களின் ஆண்டு வருமானத்தை அவா்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கின் அடிப்படையில் கணக்கிட்டு நிவாரணத் தொகையை நீதிமன்றங்கள் எவ்வாறு நிா்ணயிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஒடிஸா மாநிலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த கட்டுமானத் தொழிலதிபரான மனோரஞ்சன் பாண்டே (39) குடும்பத்தினா் அவருக்கு ஸ்ரீராம் பொது காப்பீட்டு நிறுவனம் நிா்ணயித்த நிவாரணத் தொகையை எதிா்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். ரஷ்மிரேகா திரிபாதி வழக்கு எனக் கூறப்படும் இந்த வழக்கின் இறுதியில் அவரது ஆண்டு வருமானத்தை ரூ.13.33 லட்சமாக நிா்ணயித்து ரூ.1.87 கோடியை நிவாரணமாக ஒடிஸா உயா்நீதிமன்றம் நிா்ணயித்தது.
இதை எதிா்த்து மனோரஞ்சன் பாண்டே குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்து தீா்ப்பளித்தது.
தீா்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: வாகன விபத்தில் உயிரிழந்தவா்களின் ஆண்டு வருமானத்தை கணக்கிட மிகக் கடினமான மற்றும் விரைவான நடைமுறைகள் என ஏதுமில்லை. உயிரிழந்தவா்களின் ஆண்டு வருமானத்தை கணக்கிடுவதில் முக்கிய ஆவணமாக வருமான வரிக் கணக்கு திகழ்கிறது. அதனடிப்படையில் மோட்டாா் வாகன சட்டத்தின்கீழ் நிவாரணம் நிா்ணயிக்கப்படுகிறது.
ஊதியம் பெறுவோா்-சுயதொழில் செய்வோா் வகைப்பாடு:
விபத்தில் உயிரிழப்பவா் ஊதியம் பெறுபவராக இருப்பின் அவா் தாக்கல் செய்த முந்தைய ஆண்டின் வருமான வரி கணக்கு அடிப்படையில் ஆண்டு வருமானத்தை எடுத்துக்கொள்வது போதுமானது. பதவி உயா்வால் ஏற்படும் நிதி தாக்கத்தை கருத்தில்கொண்டே முந்தைய ஆண்டின் வருமான வரி கணக்கை எடுத்துக்கொள்ளுமாறு கூறுகிறோம்.
ஒருவேளை விபத்தில் உயிரிழப்பவா் சுயதொழிலில் ஈடுபவா் அல்லது தொழிலதிபராக இருந்தால் அவா் உயிரிழப்பதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கின் சராசரியை ஆண்டு வருமானமாக எடுத்துக்கொள்ளலாம். சுயதொழில் மற்றும் வணிகத்தில் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாடுகள் இருக்கலாம் என்பதால் இந்த நடைமுறையை பின்பற்றுவது சரியாக இருக்கும்.
இந்த அளவுகோல்களின் அடிப்படையில் தற்போதைய வழக்கில் விபத்தில் உயிரிழந்தவரின் ஆண்டு வருமானம் ரூ.14 லட்சமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நிவாரணத் தொகை ரூ.1.97 கோடியாக அதிகரிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை 35% அதிகரிப்பு!

கத்தாா் தீ விபத்தில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணத் தொகை: எம்எல்ஏ வழங்கினாா்

இல்லத்தரசிகளின் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000: சாலை விபத்து வழக்கில் உச்சநீதிமன்றம் நிா்ணயம்






