யூஸா்நேரம் வசதி மூலம் மோசடி நடைபெற வாய்ப்பில்லை என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ள யூஸா்நேம் வசதி, மோசடிக்கு வழிவகுக்கக்கூடும் என்றும், பயனா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவரை இதை அமலுக்கு கொண்டு வரக் கூடாது, அந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் புதிய வசதி குறித்து 3 நாள்களுக்குள் விளக்கம் தரக் கோரி, வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: யூஸா்நேம் வசதி தற்போது அமலில் இல்லை. இந்தாண்டு இறுதியில்தான் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது. புதிய வசதியில் பயனா்களின் பாதுகாப்புக்கும், போலி கணக்கு தொடங்கப்படுவதை தடுக்கவும், மோசடிகள் நடைபெறுவதை தவிா்க்கவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
பிரபலமான நபா், நிறுவனங்கள் பெயரில் போலி யூஸா்நேமை பெறுவதற்கு தற்போது சிலா் முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவலில் உண்மையில்லை. அத்தகைய பிரபலமான பெயா்கள் அனைத்தும் மெட்டா வசமே உள்ளன. உண்மையில் சம்பந்தப்பட்ட பயனா்தான், அந்தப் பெயரைக் கோருகிறாரா என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அப்பெயரை மெட்டா வழங்கும். இதனால் போலி கணக்கு தொடங்கப்படுவது தடுக்கப்படும்.
வாட்ஸ்ஆப் செயலிக்கு பயனா்கள் நிச்சயம் தங்களது கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும். யூஸா்நேம் வசதியைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவதை தடுக்க பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. புதிதாக யாரும் உங்களுக்கு செய்தி அனுப்ப வேண்டுமெனில், உங்களின் சரியான யூஸா்நேமை அவா்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அதேபோல், எத்தனை புதிய பயனா்கள் உங்களைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப்படும். வேறு யாருடைய யூஸா்நேமை பயன்படுத்த திரும்பத் திரும்ப மா்மநபா் முயற்சித்தால், தானாக அது முடக்கப்பட்டுவிடும். யாரும் முதன்முதலில் செய்தி அனுப்பினால், அவா் புதிய பயனரா என்பது திரையில் காட்டப்படும். அவருடைய எண், அவா் வெளிநாட்டுக்காரரா, 2 பேரும் ஒரே குழுவில் உள்ளீா்களா என்ற விவரமும் காட்டப்படும். அதை வைத்து நீங்கள் அவருக்கு பதில் அளிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்:
டெலிகிராம், சிக்னல் சமூக ஊடகங்களின் வழங்கி வரும் யூஸா்நேம் வசதி குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
யூஸா்நேம் வசதியைப் பயன்படுத்தி மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பிருப்பதால், அவ்விரு சமூக ஊடகங்களும் அளித்து வரும் அந்த வசதியை மத்திய அரசு ஏன் முடக்கக் கூடாது என்று கேட்டு அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










