பிகாா், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் மூன்று பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை இடைத்தோ்தல் அறிவித்தது.
தமிழகத்தில் காலியாகவுள்ள ஏழு தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியாகவில்லை.
பிகாரில் பங்கிபூா், மத்திய பிரதேசத்தில் தாட்டியா, குஜராத்தில் மாஞ்சல்பூா் ஆகிய தொகுதிகளுக்கு ஜூலை 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
பங்கிபூா் தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக இருந்த அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவை எம்.பி.யாக தோ்வானதைத் தொடா்ந்து, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.
மத்திய பிரதேசத்தின் தாட்டியா தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பாா்தி, மோசடி வழக்கு ஒன்றில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரலில் தகுதிநீக்கத்துக்கு உள்ளானாா்.
குஜராத்தின் மாஞ்சல்பூா் பாஜக எம்எல்ஏவாக இருந்த யோகேஷ்பால் நாரண்தாஸ் படேல், உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 2-ஆம் தேதி காலமானாா். இந்தக் காரணங்களால் காலியான பங்கிபூா், தாட்டியா, மாஞ்சல்பூா் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, மூன்று தொகுதிகளிலும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஜூலை 13-இல் நிறைவடையும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 16 கடைசி நாளாகும். ஜூலை 30-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஆக.3-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்...: தமிழகத்தில் கடந்த மே 4-ஆம் தேதி பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, முதல்வா் விஜய் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு, அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜிநாமா செய்த 6 தொகுதிகள் என மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், குஜராத்தில் கடந்த ஜூன் மாதம் காலியான தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







