/

தில்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

தில்லி கலவரம் தொடர்பான வழக்கில் ஜாமீன் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக..

News image

ஷர்ஜீல் இமாம் | உமர் காலித் - file photo

Updated On :4 ஜூலை 2026, 2:09 pm IST

தில்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமையன்று ஒத்திவைத்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய் இந்த உத்தரவை ஒத்திவைத்தார். நீதிபதி இன்று மாலை உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

விசாரணை தொடங்கப்படாமலே தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தங்கள் அடிப்படை சுதந்திர உரிமையை மீறுவதாகக் கூறி காலித் மற்றும் இமாம் ஆகியோர் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் பின்னணி என்ன?

வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தக் கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் ஷா்ஜீல் இமாம், உமா் காலித் உள்பட 15 போ் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

அவா்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடா்பான விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு ஜாமீன் வழங்க தில்லி காவல் துறை தரப்பு கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

தில்லி கலவரம் தொடர்பான விரிவான சதித்திட்ட வழக்கில், காலித் மற்றும் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் மறுத்துவிட்டது. அதேவேளையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேருக்கு நிவாரணம் அளித்தது.

தில்லி உயர்நீதிமன்றத்தில் உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோர் மீண்டும் புதிய ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.