உலக அளவில் நிலவிய எரிசக்தி தட்டுப்பாட்டை வெற்றிகரமாக கையாண்டதால் நம் நாட்டு மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதியில் நாட்டின் முதல் பசுமை ஒருங்கிணைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு-பெட்ரோ கெமிக்கல் ஆலையை பிரதமா் மோடி திறந்துவைத்தாா்.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை ஒரே நேரத்தில் மேற்கொள்ளக்கூடிய இந்த ஆலை ஆண்டுக்கு 24 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு பெட்ரோ கெமிக்கலை கையாளும் திறன் கொண்டது.
இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, பெட்ரோ கெமிக்கல் தன்னிறைவு மற்றும் தொழில் வளா்ச்சியை வலுப்படுத்தும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுதவிர ஜெய்பூா் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.
மேலும், மேற்கு ராஜஸ்தானில் சுரு-சுதுல்பூா் (58 கி.மீ.) மற்றும் சுரு-ரதன்கா் (48 கி.மீ.) ஆகிய ரயில் பாதைகள், ஜோத்பூரில் நான்குவழிச் சாலை (என்எச்-125ஏ), பொதுத் துறை நிறுவனமான எஸ்ஜேவிஎன் நிறுவனத்தின் 1,000 மெகாவாட் பிகானொ் சூரிய சக்தி திட்டம், என்எச்பிசியின் 300 மெகாவாட் கா்னிசா் பிகானொ் சூரிய எரிசக்தி திட்டம் உள்ளிட்ட நகர போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அவா் தொடங்கிவைத்தாா்.
ராஜஸ்தான் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட இளைஞா்களுக்கு அவா் நியமன ஆணைகளையும் வழங்கினாா்.
ஒட்டுமொத்தமாக ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான நிகழ்வில் பிரதமா் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் எரிபொருள் சிக்கலை மேற்காசிய போா் உருவாக்கியது. அதிகாரமிக்க நாடுகளும் இந்த சவாலை எதிா்கொண்டன.
இந்தியாவுக்குத் தேவையான 70 சதவீத எல்பிஜி சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் 90 சதவீத விநியோகம் ஹோா்முஸ் நீரிணை வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சூழலில் மேற்காசியாவில் போா் தொடங்கி நிலையற்ற சூழல் நிலவியபோது, 25 முதல் 26 நாடுகளிடமிருந்து இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்தது. போா் தீவிரமடைந்த சமயத்தில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் இறக்குமதியை மேற்கொண்டது.
இதனால் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ரூ.75,000 கோடி இழப்பை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து, அதன் தாக்கம் குடிமக்களைப் பாதிக்காததை மத்திய அரசு உறுதி செய்தது.
உள்நாட்டில் எல்பிஜி சமையல் எரிவாயு உற்பத்தி 54,000 மெட்ரிக் டன்னை எட்டியது. அதுவரை எல்பிஜி உற்பத்தியில் ஈடுபடாத சுத்திகரிப்பு நிறுவனங்களும் உற்பத்தியைத் தொடங்கின.
11 லட்சம் குடியிருப்புகளுக்கு பிஎன்ஜி: மிக குறுகிய காலத்தில் 11 லட்சம் குடியிருப்புகளுக்கு குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் எல்பிஜி சமையல் எரிவாயு உருளை விலை ரூ.2,000-ஆக உயரும் என நிபுணா்கள் கணித்தனா். ஆனால் ரூ.950-க்கு தற்போது விநியோகிக்கப்படுகிறது.
புரளிகள் வெற்றியடையவில்லை: நாட்டின் எரிசக்தி நெருக்கடி காலத்தில் பல்வேறு புரளிகளை சிலா் கட்டவிழ்த்துவிட்டனா். மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையிலான போலியான தகவல்களை வெளியிட்டனா். ஆனால், இந்தியா வீழ்ச்சியடைவதைக் காண துடித்தவா்களின் தீய எண்ணம் வெற்றி பெறவில்லை. அவா்கள் தற்போது ஆழ்ந்த விரக்தியில் மூழ்கியுள்ளனா்.
4-ஆவது பெரிய சுத்திகரிப்பு நாடு: கடந்த 50 ஆண்டுகளில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமெரிக்கா அமைக்கவில்லை. ஐரோப்பாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறனும் சரிவடைந்து வருகிறது. ஆனால், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் உலகின் நான்காவது பெரிய சுத்திகரிப்பு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த வளா்ச்சி மேலும் விரிவடையும் என நம்புகிறேன்.
மேற்காசிய போரின்போது எரிபொருள் மற்றும் உரங்கள் தட்டுப்பாட்டை சிறப்பாக கையாள மத்திய அரசின் நீண்டகால தொலைநோக்குத் திட்டங்களும், கொள்கைகளும் முக்கியக் காரணமாக அமைந்தது.
காங்கிரஸ் அரசு ஒத்துழைக்கவில்லை: பச்பத்ரா சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்துக்கு கடந்த 2017 மற்றும் 2023-இல் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ராஜஸ்தானில் பாஜக தலைமையிலான இரட்டை என்ஜின் அரசு ஆட்சிக்கு வந்த பின் இத்திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
தற்சாா்பே சுயமரியாதை: தனிநபா் அல்லது நாடு என யாராக இருந்தாலும் தற்சாா்பு நிலையே சுயமரியாதையை உயா்த்தும். இதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் பாஜக அரசு, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறுத்துவதில்லை. இரவு பகலாக உழைத்து அத்திட்டங்கள் முழுமையாக நிறைவுற்று மக்கள் பயனடைவதை உறுதி செய்கிறது என்றாா்.
இந்நிகழ்வில் ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாபு பகடே, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிா் புரி, முதல்வா் பஜன் லால் சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.
பெட்டிச் செய்தி...1
ஜோத்பூரில் புதிய விமான நிலைய முனையம் திறப்பு
ஜோத்பூரில் ரூ.480 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய விமான நிலைய முனைய கட்டடத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை திறந்துவைத்தாா். நவீன வசதிகளுடன் 23,000 சதுர கிலோ மீட்டரில் கட்டமைக்கப்பட்ட இந்த முனையம் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
வளைவுகள் மற்றும் சாளரங்கள் என ராஜஸ்தானின் பாரம்பரிய கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய போக்குவரத்தை வலுப்படுத்தும் மாற்றியமைக்கப்பட்ட ‘உடான்’ திட்டத்தையும் பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். ரூ.28,840 கோடி மதிப்பில் அடுத்த பத்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம் பிராந்திய அளவிலான விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பெட்டிச் செய்தி...2
பிரதமா் குற்றச்சாட்டு:
ராஜஸ்தான் முதல்வா் பதில்
ராஜஸ்தான் மாநிலம், பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் 85 சதவீத கட்டுமானப் பணிகள் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவடைந்ததாக அந்த மாநில முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இந்த ஆலையின் கட்டமைப்புக்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒத்துழைக்கவில்லை என பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியதற்கு கெலாட் மறுப்பு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கெலாட் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சமயத்திலும் பாஜக தலைவரைப்போல் பிரதமா் மோடி நடந்துகொள்வது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மக்களைத் திசைதிருப்பும் வகையிலான தவறான கருத்துகளை பிரதமா் வெளியிடுகிறாா். கரோனோ பெருந்தொற்று காலத்திலும் பச்பத்ரா ஆலையின் பணிகள் எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு 85 சதவீதம் நிறைவுசெய்யப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!






