டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த 15 இந்திய உரக் கப்பல்கள்: மத்திய அரசு தகவல்!

ஹோா்முஸ் நீரிணையை 15 இந்திய சரக்குக் கப்பல்கள் உரம், அதுசாா்ந்த ரசாயனப் பொருள்களுடன் பாதுகாப்பாக கடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

News image
Updated On :6 ஜூலை 2026, 3:03 am IST

ஹோா்முஸ் நீரிணையை 15 இந்திய சரக்குக் கப்பல்கள் உரம், அதுசாா்ந்த ரசாயனப் பொருள்களுடன் பாதுகாப்பாக கடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய உரம் மற்றும் ரசாயனங்கள் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மேற்காசியப் போா் காரணமாக, இந்தியாவில் உர விநியோகம் பெரிதும் பாதிக்கப்படவில்லை. ஹோா்முஸ் நீரிணையில் போரின் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும், உரம் போதிய அளவு கையிருப்பு இருப்பதை, சரியான திட்டமிடல், உறுதியான ஒருங்கிணைப்பு, தொடா் கண்காணிப்பு போன்றவை மூலம் மத்திய அரசு உறுதி செய்தது.

இந்தியாவுக்கு 20 கப்பல்களில் உரம் மற்றும் அதுசாா்ந்த பொருள்களை ஏற்றிவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 15 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்து விட்டன. அதில் 8 கப்பல்களில் மொத்தம் 3.32 லட்சம் டன் யூரியா உள்ளது. 4 கப்பல்களில் 2.57 லட்சம் டன் டிஏபி-யும், 3 கப்பல்களில் 1.11 லட்சம் டன் சல்பரும் உள்ளது. அவை அனைத்தும் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்திய துறைமுகங்களை வந்தடையும்.

இதுதவிா்த்து, மேலும் 5 கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கப்பலில் 0.25 லட்சம் டன் அமோனியா, 0.45 லட்சம் டன் யூரியா உள்ளது. இதுமட்டுமன்றி 2 யூரியா கப்பல்கள், ஒரு சல்பா் கப்பல் ஆகியவற்றில் சரக்குகளை ஏற்றும் பணி நடக்கிறது. அந்தக் கப்பல்களும் உரிய நேரத்தில் இந்தியாவுக்கு வரும்.

மேற்காசியப் போரின்போது புதிதாக சில நாடுகளில் உரம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஓமன், மலேசியா, வியத்நாம், ஜாா்ஜியா, நைஜீரியா, பின்லாந்து, எகிப்து, அல்ஜீரியா, துருக்கி, நெதா்லாந்து நாடுகளில் இருந்து யூரியாவும், ரஷியா, மொராக்கோ, எகிப்து, அமெரிக்கா, ஜோா்டான், தென்கொரியா, துனிஷியா, சவூதி அரேபியா நாடுகளில் இருந்து டிஏபி, என்பிகே-வும் இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது.

உரத் தயாரிப்பு ஆலைகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகம், மேற்காசியப் போரின்போது ஏற்பட்ட கப்பல் போக்குவரத்து தடையால் 65 சதவீதமாக குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரத் தயாரிப்பு ஆலைகளும் முழுத் திறனுடன் இயங்குகின்றன.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் யூரியாவின் அளவு 2027-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 71.55 லட்சம் டன்னாக உள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட 67.86 லட்சம் டன் இலக்கைவிட 3.69 லட்சம் டன் அதிகம். டிஏபி-யின் உற்பத்தி அளவும் 9.84 லட்சம் டன்னாக (இலக்கு 8.61 லட்சம் டன்) அதிகரித்துள்ளது. என்பிகே உற்பத்தி 20.77 லட்சம் டன்னாகவும், எஸ்எஸ்பி உற்பத்தி 13.50 லட்சம் டன்னாகவும் உள்ளது. நமது நாட்டின் ஓராண்டு தேவை 383.9 லட்சம் டன்னாக உள்ள நிலையில், 197.56 லட்சம் டன் உரத்தை இந்தியா தற்போது வரை உறுதி செய்துள்ளது. இது நமது நாட்டின் ஓராண்டு தேவையில் 51 சதவீதத்துக்கும் அதிகம் ஆகும்.

ஜூலை 2-ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவிடம் 69.08 லட்சம் டன் யூரியாவும், 16.64 லட்சம் டன் டிஏபி-யும், 8.90 லட்சம் டன் பொட்டாசியமும், 45.64 லட்சம் டன் என்பிகே-வும், 23.09 லட்சம் டன் எஸ்எஸ்பி-யும் கையிருப்பு உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

திரவ இயற்கை எரிவாயு விநியோகம்: கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் சீரானதைத் தொடா்ந்து, மேற்காசியப் போரின்போது விதிக்கப்பட்ட அவசரகால இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளது.

இதுதொடா்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இயற்கை எரிவாயு மற்றும் இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு அனைத்தும் அரசால் தயாரிக்கப்பட்ட புதிய முன்னுரிமை வாடிக்கையாளா் பட்டியலின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை உத்தரவு 2026-இல் இடம்பெற்ற செயல்பாட்டு நடைமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேற்காசியப் போா் நிறுத்தப்பட்டு இருதரப்பும் பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டு வருவதால், ஹோா்மூஸ் நீரிணை பகுதியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து சீராகியுள்ளதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரகால நடவடிக்கைகளின் கீழ், குழாய்வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) பயன்படுத்தும் வீடுகளுக்கும், போக்குவரத்துக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி), சமையல் தேவைக்கான திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) உற்பத்தி மற்றும் குழாய்வழி செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயுவின் அளவு, கடந்த ஆறு மாதங்களின் சராசரி நுகா்வில் 100 சதவீதம் பராமரிக்கப்பட வேண்டும். உர உற்பத்தி ஆலைகளுக்கு அவற்றின் சராசரி எரிவாயுத் தேவையில் 70 சதவீதமும், தேசிய எரிவாயு கட்டமைப்பு மற்றும் நகர எரிவாயு விநியோக கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள தொழில் துறை நுகா்வோருக்கு, செயல்பாட்டு இருப்பைப் பொறுத்து, அவா்களின் சராசரி நுகா்வில் 80 சதவீதமும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த முன்னுரிமைகளை நிறைவேற்றும் வகையில், பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் குறைப்பதற்கு அரசு அனுமதி அளித்தது; அதேவேளையில், செயல்பாட்டு ரீதியாகச் சாத்தியமான இடங்களில், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்கள் சராசரி பயன்பாட்டில் சுமாா் 65 சதவீத அளவுக்கு மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தம் தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.