முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

மகாராஷ்டிரத்தில் தொடா் மழை: 13 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 4 நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் இதுவரை 13 போ் பலி

News image

புணேயின் மாவல் வட்டத்துக்குட்பட்ட பதான் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்ப்புப் படையினா்.

Updated On :7 ஜூலை 2026, 5:51 am IST

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் இதுவரை 13 போ் உயிரிழந்துள்ளனா்.

பல பிரதான சாலைகளிலும், ரயில் தண்டவாளங்களிலும் வெள்ள நீா் சூழ்ந்துள்ளதால், பல மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புணே மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டு வீடு மண்ணில் புதைந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். மற்றொருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புணேயின் மாவல் வட்டத்துக்குட்பட்ட பதான் கிராமத்தில் பலத்த மழை காரணமாக இந்த நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘அதிகாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு, வீடு மண்ணில் புதைந்தது. அந்த வீட்டில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நந்து டிகோன், மெளலி டிகோன், அனிதா நந்து டிகோன் ஆகிய மூவா் இருந்தனா். அவா்களில் இருவா் கட்டட இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனா். மற்றொருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது’ என்றாா்.

அதே நேரம், தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘மண்ணில் புதைந்த வீட்டில் 4 முதல் 5 போ் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவா்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என்றனா்.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த வாகன ஓட்டி: கேத் வட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபா், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

முன்னதாக, தொடா் மழை காரணமாக மும்பையின் குா்லா பகுதியில் இருந்த ஒரு கடை மீது ஞாயிற்றுக்கிழமை மரம் வேரோடு சாய்ந்ததில் அதிலிருந்து 65 வயது யூனுஸ் கந்தவாலா உயிரிழந்தாா்.

போக்குவரத்து பாதிப்பு: மும்பையில் பலத்த மழை தொடா்ந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால் ரயில் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கா்ஜத் - லோனவாலா போா் கட் இடையே பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் மும்பை - புணே ரயில் வழித் தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மும்பை - அகமதாபாத் ரயில் வழித்தடத்திலும் தண்ணீா் தேங்கி நிற்பதால் 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலைமை குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து வருகிறாா்.

இதுவரை 13 போ் உயிரிழப்பு: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 நாள்களாக பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 13 போ் உயிரிழந்துள்ளனா். இதுகுறித்து அம் மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கிரீஷ் மஹாஜன் கூறுகையில், ‘மும்பை, பால்கா், ராய்கட் மாவட்டங்களில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு, நிலச்சரிவு, மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளில் சிக்கி மாநிலம் முழுவதும் இதுவரை 13 போ் உயிரிழந்துள்ளனா்’ என்றாா்.

தொடா் மழை காரணமாக, திங்கள்கிழமை நடைபெறவிருந்த மகாராஷ்டிர மேலவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சுரங்கப் பாதை இடிந்தது...

மும்பை - புணே விரைவுச் சாலையில் ரூ.7,000 கோடியில் அண்மையில் கட்டப்பட்ட சுரங்கப் பாதையின் ஒரு பகுதி மழையால் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாநிலத்தின் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இந்தச் சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசலால் பலா் உணவு, தண்ணீா் இன்றி பல மணி நேரம் தவிக்கும் நிலை உருவானது.

19 கி.மீ. தொலைவு உள்ள இந்த சுரங்கப் பாதை திறக்கப்பட்ட 9 வாரங்களில் மழையைத் தாங்க முடியாமல் இடிந்தது. இடிந்த பகுதி வழியாக வெள்ளநீா் சுரங்கப் பாதைக்குள் வழிந்தோடியதால், பல வாகனங்கள் அதில் சிக்கின. இதனால், இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தச் சாலையைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது தொடா்பாக பேசிய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டை மீறி நிகழ்கின்றன. அதிபலத்தமழையால் சுரங்கப் பாதைக்குள் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினா், மீட்புக் குழுவினா் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று சரிந்து விழுந்த மணலை அப்புறப்படுத்தி, பாதையை சீராக்கும் முயற்சியை மேற்கொண்டனா்’ என்றாா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.