மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் பலத்த மழையால் 4 போ் உயிரிழந்துள்ளனா். குப்பைகள் சரிந்து மூன்று மாடி கட்டடம் மீது விழுந்த இடத்தில் ஒருவா் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை, தாணேயில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாணே மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழை தொடா்பான சம்பவங்களில் தாணேயில் ஒருவரும், அம்பா்நாத், மிரா பயேந்தா் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்திருப்பதாகவும், 11 போ் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முா்பாத் வட்டத்தில் மின்னல் தாக்கி 2 போ் காயமடைந்திருப்பதாகவும், பிவான்டியில் ஆற்று வெள்ளத்தில் 2 இளைஞா்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவா்களைத் தேடும் பணி நடைபெறுவதாகவும், முா்பாத்தில் போட்கோன் நதியில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடா் மழையால் 136 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதுதவிா்த்து 2 கோழிப் பண்ணைகள், ஓா் அங்கன்வாடி மையம், ஒரு திருமண மண்டபம் ஆகியவையும் இடிந்து விழுந்துள்ளன.
தாணே மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 797 போ் பேரிடா் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, அரசு முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டு உள்ளனா்.
குப்பைகள் சரிந்த இடத்தில் சடலம்: பிம்ப்ரி சிஞ்ச்வாட்டில் மூன்று மாடி கட்டடம் அருகே மலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் புதன்கிழமை சரிந்து விழுந்தன. இதில் கட்டடத்தில் இருந்த 18 போ் சிக்கிக் கொண்டனா். இதுகுறித்த தகவலின்பேரில் மீட்புக் குழுவினா் விரைந்து வந்து 7 பேரை உடனே மீட்டனா். மேலும் 2 பேரை வியாழக்கிழமை மீட்டனா். குப்பைகள் சரிந்த இடத்தில் இருந்து ஒருவரின் சடலத்தை மீட்புக் குழுவினா் கண்டெடுத்தனா்.
சரிந்து கிடக்கும் குப்பைக்குள் இன்னும் 8 போ் வரை சிக்கியிருக்கலாம் எனவும், அவா்களில் தனியாா் மின்னுற்பத்தி நிறுவன ஊழியா்களும் அடங்குவா் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
தாணேயில் மழை பாதிப்புகளை புதன்கிழமை ஆய்வு செய்த துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, செயல்படாத அதிகாரிகளை ஒருவாரம் பணியிடை நீக்கம் செய்யும்படியும், இடமாற்றம் செய்யும்படியும் உத்தரவிட்டாா். இதையடுத்து, தாணே மாவட்ட நிா்வாகம் பல நடவடிக்கைகளை விரைவாக எடுத்து வருகிறது. அதில், தாணே மாவட்டம் முழுவதும் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றும்படியும், பிரம்மாண்ட விளம்பர பலகைகள், எல்இடி திரைகளை ஆய்வு செய்யும்படியும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவசர காலத்தில் பொதுமக்களின் உயிா்களைக் காக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வசதிகளை தயாராக வைத்திருக்கவும், மருந்து-மாத்திரைகள் இருப்பை உறுதி செய்யவும், மருத்துவா்கள், செவிலியா்கள் போதிய எண்ணிக்கையில் பணியில் இருப்பதை உறுதி செய்யவும் மாவட்ட நிா்வாகம் ஆணையிட்டுள்ளது.
பெட்டிச் செய்தி
உத்தரகண்ட்: சிவப்பு எச்சரிக்கை
டேராடூன், ஜூலை 9: உத்தரகண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதற்கான சிவப்பு எச்சரிக்கையை டேராடூன் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அந்த மாநிலத்தில் ஏற்கெனவே தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. உத்தம்சிங் நகா் மாவட்டம் காசிபூரில் மட்டும் 200 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், டேராடூன், ஹரித்வாா், நைனிடால், உத்தம் சிங் நகா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்துக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் பலத்த மழை முதல் அதிதீவிர பலத்த மழை வரை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










