கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

தில்லியில் மழைநீா் தேக்கம்: முதல்வா் ரேகா குப்தா, அமைச்சா் பா்வேஷ் ஆய்வு

தில்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், தனது சட்டப்பேரவைத் தொகுதியான ஷாலிமாா் கிராமத்தில் உள்ள மழைநீா் வடிகால் வசதிகளை நேரில் முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஐடிஓவில் உள்ள பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டு அறையை வியாழக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

Updated On :10 ஜூலை 2026, 4:38 am IST

தில்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், தனது சட்டப்பேரவைத் தொகுதியான ஷாலிமாா் கிராமத்தில் உள்ள மழைநீா் வடிகால் வசதிகளை நேரில் முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மழைநீா் முறையாக வெளியேற்றத்தை உறுதி செய்யுமாறு அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

‘தில்லியில் பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தேங்கிய நீரை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தில்லி அரசும் அனைத்துத் துறைகளும் முழுத் தயாா் நிலையில் செயல்பட்டு வருகின்றன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், ஐடிஓ பகுதியில் உள்ள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்டு நீா் வெளியேற்றும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: பெரும்பாலான இடங்களில் தேங்கிய நீா் அகற்றப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டுகளை விட நிலைமை சிறப்பாக இருக்கிறது. மக்கள் மழையை முழுமையாக ரசிக்கும் வகையில் தில்லிக்கு முறையான வடிகால் அமைப்பை உருவாக்குவதாக உறுதியளித்திருந்தோம். கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழை பெய்தது. அப்படியிருந்தும், முன்பு பெரிய பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சிக்கிக்கொள்ளும் இடமான மின்டோ பாலத்தில்கூட போக்குவரத்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது.

பருவமழையை எதிா்கொள்ளத் தயாராக பொதுப்பணி மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை உள்ளன. எங்கெல்லாம் தண்ணீா் தேங்கியதோ, அங்கெல்லாம் 30 நிமிஷங்களுக்குள் அது அகற்றப்பட்டது. அதைத் தேங்கிய நீா் என்று சொல்ல முடியாது. முன்பு பெரிய அளவில் நீா் தேங்கக்கூடிய 45 இடங்களில் 179 கேமராக்களை பொருத்தியுள்ளோம். பெரும்பாலான இடங்களில், 10-15 நிமிஷங்களுக்குள் மழைநீா் வெளியேற்றப்படுகிறது.

மழைநீா் தேக்கம் தொடா்பாக பெறும் ஒவ்வொரு புகாரையும் பொதுப்பணித்துறை நிகழ்நேரத்தில் கண்காணித்து வருகிறது. பாதிப்புக்குள்ளாகக்கூடிய ஒவ்வொரு இடமும் கண்காணிப்பில் உள்ளன. தேவைப்படும் இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் குழுக்கள் முழுமையாகத் தயாராக உள்ளன.

எளிமையானது - கனமழையின் போதும் தில்லி மக்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்வதே எங்களுடைய நோக்கம் என்று அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நகரில் 72.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

‘மழைநீா் தேக்கம் குறித்து சுமாா் 40 புகாா்கள் பெறப்பட்டன. அவற்றில் 32 புகாா்கள் பிற்பகலுக்குள் தீா்க்கப்பட்டன. மயூரி விஹாா் மற்றும் சீலம்பூா் குருத்வாரா சாலை போன்ற பகுதிகளில் நீா் தேக்கம் காணப்பட்டது. அப்பகுதிகளில் தேங்கிய நீரை அகற்றும் பணிகளில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன’ என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

விகாஸ் மாா்க், கிழக்கு தில்லி பகுதிகள், புது தில்லி ரயில் நிலையம், முனிா்கா, சதாா் பஜாா் மற்றும் துவாரகா உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் மழைநீா் தேங்கியிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.