கட்டாய கண்காணிப்பு கேமரா நடைமுறையைப் பின்பற்றாத 70 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கல்லூரி வளாகத்தில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும், அவற்றுடன் விடியோ பதிவு இயந்திரங்களுடன் (என்விஆா்) இணைக்கவும், அந்த கண்காணிப்பு கேமராக்களின் நேரலை வசதியை (லைவ் ஃபீட்) என்எம்சி-யின் கட்டுப்பாட்டு மையத்துக்கு வழங்கவும் அந்த நோட்டீஸ் என்எம்சி அறிவுறுத்தியுள்ளது.
இளநிலை மருத்துவக் கல்வி தர ஒழுங்குமுறை வழிகாட்டுதல் 2023, மருத்துவ ஆய்வு மற்றும் தர வாரிய நடைமுறை 2023 மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி தர மேம்பாட்டு நடைமுறை 2023 ஆகிய நடைமுறைகள் உள்ளிட்ட நடைமுறைகளை என்எம்சி வகுத்துள்ளது. இந்த நடைமுறைகளின்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், கல்லூரி வளாகத்தில் அறிவுறுத்தப்பட்ட இடங்களில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதோடு, அவற்றை விடியோ பதிவு (என்விஆா்) இயந்திரங்களுடனும் இணைக்க வேண்டும். மேலும், இந்த கண்காணிப்பு கேமராக்களின் நேரலை வசதியை என்எம்சி-யின் கட்டுப்பாட்டு மையத்துக்கு வழங்குவதோடு, கண்காணிப்பு கேமரா பதிவுகளை 30 நாள்களுக்கு பாதுகாத்து (சேமித்து) வைத்திருப்பதும் கட்டாயமாகும்.
இந்த நிலையில், இந்த நடைமுறையைப் பின்பற்றாத 70 மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
என்எம்சி-யின் தகவல் தொழில்நுட்பக் குழு தொடா்ந்து அறிவுறுத்தியும், 70 மருத்துவக் கல்லூரிகள் கண்காணிப்பு கேமரா நேரலையை என்எம்சி கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்காதது தெரிவந்துள்ளது. அனைத்துக் கல்லூரிகளும், இந்த நடைமுறையை உடனடியாகப் பின்பற்ற வேண்டும். இந்த விஷயத்தில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகளை கல்லூரிகள் சந்தித்தால், என்எம்சி உதவியை நாடலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 13 கல்லூரிகளுக்கு என்எம்சி இந்த நோட்டீஸை பிறப்பித்துள்ளது. இதற்கு அடுத்து மகாராஷ்டிரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள், தில்லியில் 8 மருத்துவக் கல்லூரகள் உள்பட நாடு முழுவதும் 70 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக கட்டணம் கூடாது! தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!

மருத்துவ நிறுவனச் சட்டத் திருத்தங்கள் அறிவிக்கை: நடைமுறை மீறல்களுக்கான தண்டனை குறைப்பு

வால்பாறை 40 கொண்டை ஊசி வளைவுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்







