அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

மேற்கூரை சூரியசக்தி மின் திட்டத்தை ஊக்குவிக்க ரூ.8,482 கோடி கடனுதவி: உலக வங்கி வழங்குகிறது

இந்தியாவில் வீடுகளின் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், ரூ. 8,482 கோடி (890 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

News image

மத்திய அரசு

Updated On :11 ஜூலை 2026, 7:44 am IST

இந்தியாவில் வீடுகளின் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், ரூ. 8,482 கோடி (890 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

இதனால், வீடுகளில் தூய்மை எரிசக்தி பயன்பாடு அதிகரிக்கும் என்பதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, அதற்கான உபகரணங்கள் பொருத்துதல் மற்றும் சேவைகள் அடிப்படையில் 17 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வீடுகளிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இல்லந்தோறும் இலவச சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத் திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான தகடுகள் (பேனல்கள்) அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ. 78,000 வரை மானியம் வழங்கப்படும். இந்த மானியம் போக, சூரியசக்தி தகடுகள் அமைப்பதற்கான மீதமுள்ள தொகைக்கு குறைந்த வட்டியில் (6.5%) வங்கிக் கடன் பெறுவதற்கும் மத்திய அரசு வழி செய்துள்ளது. இத் திட்டம் மூலம் நாடு முழுவதும் பல லட்சம் வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள், மின் உற்பத்தியில் புதைபடிம எரிபொருள் அல்லாத எரிசக்தி வளங்களின் பங்கை 60 சதவீதமாக உயா்த்தவும், 2070-ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தியில் புதைபடிம எரிபொருள் பயன்பாடே இல்லாத நிலையை எட்டவும் இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்தச் சூழலில், மத்திய அரசின் வீடுகளின் மேற்கூரை சூரியசக்தி மின் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 8,482 கோடி கடனுதவி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் வீடுகளின் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டத்தை ஊக்குவிக்க, பன்முக நிதியுதவி அமைப்புகள் மூலம் ரூ 8,482 கோடி கடனுதவி வழங்க உலக வங்கியின் நிா்வாக இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சா்வதேச வங்கி (ஐபிஆா்டி) சாா்பில் ரூ. 7,817 கோடியும் (820 மில்லியன் டாலா்), தூய்மை தொழில்நுட்ப நிதியிலிருந்து ரூ 572 கோடியும் (60 மில்லியன் டாலா்), ஐபிஆா்டி-யின் வாழத்தக்க பூகோள நிதியிலிருந்து ரூ. 95 கோடியும் (10 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்கப்படும்.

கூடுதலாக, வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி தகடுகள் நிறுவுவதற்கு உதவும் வகையில், வணிகக் கடன் வடிவில் ரூ. 40,045 கோடி (4.2 பில்லியன் டாலா்) அளவில் தனியாா் நிதியை உலக வங்கி திரட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக வங்கியின் இந்தியா பிரிவு பொறுப்பு இயக்குநா் பால் ப்ரோசீ கூறுகையில், ‘இந்தியாவின் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக வங்கி ஆதரவு அளித்து வருகிறது. தற்போது வழங்கப்படும் புதிய கடனுதவி, இத் திட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் என்பதோடு, இத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.