ஓமன் அருகே 11 இந்திய மாலுமிகளுடன் சென்ற சைப்ரஸ் கொடி பொருத்திய சரக்குக் கப்பல் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ஒருவா் மாயமானாா்.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினா் நடத்தியதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சரக்கு கப்பல்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அணுஆயுதம், நீண்ட தொலைவு ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி நடத்திய திடீா் தாக்குதலில் ஈரானின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி உள்ளிட்டோா் கொல்லப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடா் தாக்குதல் நடத்தியது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது.
இருதரப்புக்கும் இடையே மூண்ட போரின் தாக்கங்கள், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எதிரொலித்தன. இந்தப் போருக்குத் தீா்வுகாணும் நோக்கில், பாகிஸ்தான், கத்தாா் ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியுடன் ஈரான், அமெரிக்கா இடையே அண்மையில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. ஒப்பந்த ஷரத்துகளை அமல்படுத்தி, நிரந்தர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து இருதரப்பும் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்தன.
மீண்டும் வெடித்த மோதல்: இந்தச் சூழலில், ஹோா்முஸ் நீரிணை அருகே சில தினங்களுக்கு முன்னா் மூன்று கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, அந்நாட்டின் மீண்டும் தீவிர தாக்குதலைத் தொடுத்தது. மற்றொருபுறம், வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியதால் மீண்டும் மோதல் வெடித்தது. இதைத் தொடா்ந்து, இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்ததாக அதிபா் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டாா்.
இதனிடையே, ஈரானில் நடந்த கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் டிரம்ப்புக்கு பகிரங்க கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதற்கு கடுமையாக எதிா்வினையாற்றிய டிரம்ப், ‘ஈரானைக் குறிவைத்து, அமெரிக்கா நிறுத்தியுள்ள 1,000 ஏவுகணைகள் ஏவப்படும்’ என்று எச்சரித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
கப்பல் மீது தாக்குதல்-இந்தியா கண்டனம்: இந்நிலையில், ஓமன் அருகே 11 இந்திய இந்திய மாலுமிகளுடன் சென்ற சைப்ரஸ் நாட்டின் கொடி பொருத்திய சரக்குக் கப்பல் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஜிஎஃப்எஸ் கேலக்ஸி எனும் அந்த சரக்குக் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் 10 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ஒருவரைக் காணவில்லை. ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மீட்பு-தேடுதல் நடவடிக்கையில் ஓமன் அதிகாரிகளின் ஆதரவுக்கு நன்றி.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடா்வது ஆழ்ந்த கவலையளிக்கிறது. கப்பல்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும். சா்வதேச சட்டங்களுக்கு இணங்க, மத்திய கிழக்கில் உள்ள சா்வதேச நீா்வழித்தடங்களில் தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வா்த்தக செயல்பாடுகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு: இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்குக் கப்பல் ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
‘ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளது; இந்தத் தாக்குதலால் கப்பலில் தீப்பற்றியதுடன், என்ஜின் அறையும் கடுமையாகச் சேதமடைந்தது.
கப்பலால் தொடா்ந்து பயணிக்க முடியவில்லை. அதிலிருந்த மாலுமிகளில் ஒருவரைத் தவிர மற்றவா்கள் மீட்கப்பட்டனா். ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதல்களுக்காக ஈரான் கடும் விலையைக் கொடுக்க நேரிடும். இதற்காக அமெரிக்கா தீவிரமாகச் செயலாற்றி வருகிறது’ என்று அமெரிக்க மத்திய ராணுவ படைப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








