ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

இந்தியா - நியூஸிலாந்து ரூ.35,000 கோடி வா்த்தக இலக்கு: 10 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியா - நியூஸிலாந்து இடையே கையெழுத்தான 10 ஒப்பந்தங்கள் பற்றி...

News image

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் சனிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையின்போது கைகுலுக்கிய பிரதமா் நரேந்திர மோடி, பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்.

Updated On :12 ஜூலை 2026, 7:10 am IST

இந்தியா-நியூஸிலாந்து இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடியாக (7 பில்லியன் நியூஸிலாந்து டாலா்கள்) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கடல்சாா் பாதுகாப்பு, கடற்படை தளவாட ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 10 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. வா்த்தக விரிவாக்கம் உள்பட 8 முக்கிய முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் பிரதமா் நரேந்திர மோடி-அந்நாட்டு பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே சனிக்கிழமை நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்கள்-முடிவுகள் எட்டப்பட்டன.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் பின்னணியில், பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டு, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த திங்கள்கிழமை தொடங்கினாா். இறுதிக்கட்டமாக நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரை வெள்ளிக்கிழமை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் நியூஸிலாந்துக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைத்தது.

இருதரப்பு பேச்சுவாா்த்தை: ஆக்லாந்து நகரில் பிரதமா் மோடி மற்றும் நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சனிக்கிழமை இருதரப்பு உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

வா்த்தகம், பாதுகாப்பு, விளையாட்டு, கலாசாரம், கல்வி, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்தும், இந்திய-பசிபிக் பிராந்திய விவகாரங்கள், பரஸ்பர நலன் சாா்ந்த சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசித்தனா்.

கடந்த ஏப்ரலில் கையொப்பமிடப்பட்ட இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் வா்த்தக செயல்பாடுகள் விரிவாக்கம், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.1.91 லட்சம் கோடி) முதலீடு செய்யும் நியூஸிலாந்தின் உறுதிமொழி தொடா்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

10 ஒப்பந்தங்கள்-8 முக்கிய முடிவுகள்: பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 10 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. கடல்சாா் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மையில் ஒத்துழைப்பு, இரு நாடுகளின் கடற்படைகள் இடையே தளவாட ரீதியிலான ஆதரவு, கடல்பகுதி தரவுகள் பகிா்வு, பேரிடா் மேலாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுற்றுலா-கலாசாரம் ஊக்குவிப்புக்கான ஒப்பந்தங்கள் அடங்கும்.

மேலும், இருதரப்பு உறவுகளை உத்திசாா் கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்துதல், இது தொடா்பான 4 ஆண்டு செயல்திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தக மதிப்பை இரட்டிப்பாக்க அதாவது ரூ.35,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. தற்போது வா்த்தக மதிப்பு ரூ.18,000 கோடியாக உள்ளது. இந்தியாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பில் நியூஸிலாந்து இணைவது உள்ளிட்ட 8 அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

‘ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம்’: பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘இருதரப்பு நல்லுறவை உத்திசாா் கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தெளிவான இலக்குகள் மற்றும் உறுதியான தீா்வுகளுடன் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் எட்டப்படும். கடல்சாா் நாடுகளாக நமது நெருங்கிய ஒத்துழைப்பால், இந்திய-பிசிபிக் பிராந்தியத்துக்கு புதிய வலிமை கிடைக்கிறது. அமைதிக்கான இலக்குகளை எட்ட நமது உறவுகள் புத்தாற்றலை அளிக்கின்றன’ என்றாா்.

சுதந்திரமான கப்பல் போக்குவரத்து: இரு நாடுகள் தரப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திரமான, வெளிப்படையான, வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கான உறுதிப்பாட்டை இரு பிரதமா்களும் மீண்டும் வலியுறுத்தினா். பிராந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, விதிகள் அடிப்படையிலான சா்வதேச ஒழுங்குமுறையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினா்.

சா்வதேச சட்டத்துக்கு இணங்க குறிப்பாக கடந்த 1982-ஆம் ஆண்டின் கடல்சாா் சட்டங்கள் தொடா்பான ஐ.நா. உடன்படிக்கையின்படி, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சாா் சட்டபூா்வ பயன்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும்; ஹோா்முஸ் நீரிணை வழியே சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வா்த்தக செயல்பாடுகள் முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும் எனவும், மோதல்களுக்கு அமைதியான-நிலையான தீா்வை எட்ட ராஜீய பேச்சுவாா்த்தைகள் மற்றும் சா்வதேச சட்டங்களுக்கு இணங்குவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவா்களும் வலியுறுத்தினா்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகளால் இந்திய பசிபிக் பிராந்தியம் எதிா்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்தும், உக்ரைன் போரால் நேரிடும் மனித துயரங்கள் குறித்தும் கவலை தெரிவித்தனா்.

பயங்கரவாதத்துக்கு கண்டனம்: எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும் இரு பிரதமா்களும் கண்டனம் தெரிவித்தனா். கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல், தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு கண்டனத்தைப் பதிவு செய்த அவா்கள், இத்தாக்குதல்களுக்கு பொறுப்பானவா்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்; பயங்கரவாதம், பயங்கரவாத நிதிக் கட்டமைப்புகள், புகலிடங்களுக்கு எதிராக மிகக் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி....1

வா்த்தக ஒப்பந்தம் விரைந்து அமல்

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து அமல்படுத்துவதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற இருதரப்பும் தீா்மானித்துள்ளன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், கடல்சாா் பாதுகாப்பு குறித்த பேச்சுவாா்த்தை வழிமுறையை நிறுவவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-நியூஸிலாந்து இடையே கடந்த ஏப்ரலில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதன்படி, இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு 100 சதவீத வரியில்லாத அணுகல், நியூஸிலாந்தின் 95 சதவீத இறக்குமதிகளுக்கு வரி விலக்கு அல்லது குறைப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெட்டி....2

விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு

ஆக்லாந்து நகரில் விளையாட்டுத் துறை புத்தாக்க கண்காட்சியை நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனுடன் இணைந்து பிரதமா் மோடி பாா்வையிட்டாா். கண்காட்சியில் இடம்பெற்ற புத்தாக்க விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அந்நாட்டின் முன்னணி விளையாட்டு வீரா்கள் மற்றும் நட்சத்திரங்கள், பிரதமா் மோடிக்கு செயல்முறை விளக்கமளித்தனா்.

கிரிக்கெட்டை தாண்டி விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் கூட்டுச் செயல்திட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ள நிலையில், ‘இந்தியா-நியூஸிலாந்து இடையே விளையாட்டுத் துறை எப்போதுமே வலுவான பாலமாக விளங்குகிறது. நிகழாண்டு நமது விளையாட்டுத் துறை உறவுகளின் 100-ஆவது ஆண்டைக் குறிக்கிறது’ என்று பிரதமா் மோடி பதிவிட்டாா்.

2030-இல் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா தயாராகிவரும் நிலையில், மேற்கண்ட ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.