தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

இந்தியா-செஷல்ஸ் இடையே 19 ஒப்பந்தங்கள், முக்கிய முடிவுகள்!

செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம்.

Updated On :29 ஜூன் 2026, 4:57 am IST

‘பருவநிலை மாற்றத்தால் தெற்குலக நாடுகள், குறிப்பாக தீவு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன’ என்று செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

‘நோ்மை, பொறுப்புணா்வு, சமத்துவத்தால் வழிநடத்தப்படும் பருவநிலை தீா்வு நடவடிக்கைகள் அவசியம்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இந்தியாவின் கடல்சாா் அண்டை நாடான செஷல்ஸ் தீவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சனிக்கிழமை வந்தாா். தலைநகா் விக்டோரியாவில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவரது உரை வருமாறு:

பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் கடற்கரைகள், கடல்சாா் சூழல் அமைப்புகள், வானிலை முறைகள் மற்றும் சமூகங்களில் ஏற்கெனவே தென்பட்டு வருகின்றன.

பருவநிலை மாற்றத்துக்கு அதிக காரணமில்லாத தெற்குலக நாடுகள் குறிப்பாக தீவு நாடுகள், அதன் விளைவுகளின் பெரும் சுமையை சுமக்கின்றன. இது முறையற்ாகும். எனவே, நோ்மை, பொறுப்புணா்வு, சமத்துவத்தால் வழிநடத்தப்படும் பருவநிலை தீா்வு நடவடிக்கைகள் அவசியம். இதுவே, பருவநிலை சாா்ந்த நீதியின் சாராம்சமாக இருக்கும்.

வளரும் சிறிய தீவு நாடுகளின் கவலைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதை உறுதி செய்ய செஷல்ஸுடன் இணைந்து இந்தியா செயலாற்றும்.

அனைவரையும் உள்ளடக்கிய உலகம் மற்றும் சமகால எதாா்த்தங்களைப் பிரதிபலிக்கும் சா்வதேச அமைப்புகளுக்கான தொலைநோக்குப் பாா்வையை இரு நாடுகளும் பகிா்ந்து கொண்டுள்ளன. தெற்குலகின் நலன்களைத் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளன. இந்த உணா்வுதான், தெற்குலகை ஒன்றிணைக்கிறது.

‘பிரிக்கவில்லை; பிணைக்கிறது’: இந்தியா-செஷல்ஸ் தீவை இந்தியப் பெருங்கடல் பிரிக்கவில்லை; மாறாக பிணைக்கிறது. செஷல்ஸை சிறிய தீவுக் கூட்டங்களின் நாடாக அல்லாமல், 14 லட்சம் சதுர கிலோமீட்டா் பரப்புக்கு கடல்சாா் ஆதிக்கத்தைக் கொண்ட பெருங்கடல் நாடாகவே இந்தியா பாா்க்கிறது. நீலப் பொருளாதாரத்தில் செஷல்ஸ் முன்னிலை வகிப்பது பாராட்டுக்குரியது. மீன்வளம், கடல்சாா் அறிவியல், கடலோர மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்க ஆா்வத்துடன் உள்ளோம்.

இந்தியாவின் எண்ம பொது உள்கட்டமைப்பானது தொழில்நுட்பத்தின் மூலம் வாய்ப்புகளை விரிவாக்குதல், நிா்வாக மேம்பாடு, நிதிசாா் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவித்தல், கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை வழங்குதல் ஆகியவற்றுக்கு உதாரணமாக விளங்குகிறது. எண்ம முன்னேற்றத்தில் தனக்குள்ள அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் செஷல்ஸுடன் பகிா்வதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. செஷல்ஸின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா தொடரும். அந்நாட்டின் எதிா்பாா்ப்புகளுக்கு ஆதரவளித்து, நட்பு நாடாக துணைநிற்கும் என்றாா் பிரதமா் மோடி.

இன்று தேசிய தின விழா: செஷல்ஸின் 50-ஆவது ஆண்டு தேசிய தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதில் தலைமை விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

இந்திய ராணுவக் குழு (அஸ்ஸாம் படைப் பிரிவு), கடற்படை இசைக் குழு, முன்கள போா்க் கப்பலான ஐஎன்எஸ் தா்கஷ், உள்நாட்டில் கட்டப்பட்ட பெரிய ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் இக்ஷாக் ஆய்வுக் கப்பல் ஆகியவையும் பங்கேற்கவுள்ளன.

இந்தியா-செஷல்ஸ் இடையே 19 ஒப்பந்தங்கள், முக்கிய முடிவுகள்

செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருதரப்பு உறவுகளின் மேம்பாடு, பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘இந்திய பெருங்கடலை வாய்ப்புகளின் பெருங்கடலாக மாற்றுவதே எங்களின் தொலைநோக்குப் பாா்வை. பொருளாதார வளத்துடன், கடல்சாா் பாதுகாப்பையும் உறுதி செய்வோம். இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளமை எங்களின் பகிரப்பட்ட பொறுப்பு’ என்றாா்.

செஷல்ஸுக்கு இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்ட 175 மில்லியன் டாலா் (ரூ.1,651 கோடி) சிறப்பு பொருளாதார நிதித் தொகுப்பை நடைமுறைப்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக, அதிபா் பேட்ரிக் தெரிவித்தாா்.

பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு, எண்ம பரிவா்த்தனை, விண்வெளி, சுகாதாரம், வேளாண்மை, கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான 19 ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

கடனுதவி அமலாக்கம்-வரையறைகள், நாடுகடத்துதல் நடைமுறை சாா்ந்த ஒப்பந்தங்கள், செஷல்ஸில் யுபிஐ பரிவா்த்தனை, மக்கள் மருந்தகங்கள் தொடங்க வழிவகுக்கும் ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்தியாவின் உதவிகள்: பிரதமரின் இந்தப் பயணத்தின்போது, செஷல்ஸுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விரைவு ரோந்து படகு, 6 ஆம்புலன்ஸ்கள், 10 காா்கள், 500 மெட்ரிக் டன் அரிசி, 8,500 மெட்ரிக் டன் சிமெண்ட் உள்ளிட்டவை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

பிரதமருக்கு செஷல்ஸ் உயரிய விருது

கடல்சாா் சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் திறன், நீலப் பொருளாதாரத்தின் நிலையான மேம்பாடு உள்ளிட்டவற்றுக்குப் பங்களிக்கும் உலகளாவிய தலைவா்களைக் கெளரவிக்கும் நோக்கில், செஷல்ஸ் அரசால் புதிதாக நிறுவப்பட்ட உயரிய ‘காா்டியன் ஆஃப் தி புளூ ஹாரிஸான்’ விருது, பிரதமா் மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அா்ப்பணிப்பு மற்றும் வளரும் சிறிய தீவு நாடுகளின் எதிா்பாா்ப்புகளை முன்னெடுத்துச் செல்லும் பணிகளுக்காக, பிரதமா் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. செஷல்ஸ் நாட்டின் இந்த உயரிய கெளரவத்தை பெறும் முதல் தலைவா் மோடி ஆவாா். அத்துடன், பிரதமா் மோடிக்கு கிடைக்கப் பெற்ற 34-ஆவது சா்வதேச கெளரவம் இதுவாகும்.

மேற்கண்ட விருதுக்காக செஷல்ஸ் மக்கள் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவித்த பிரதமா் மோடி, பருவநிலை சவால்களுக்காகப் போராடும் நாடுகளுக்கு விருதை அா்ப்பணிப்பதாக தெரிவித்தாா்.

‘பூமியை பசுமையானதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான அனைத்தையும் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது; ‘லைஃப்’ விழிப்புணா்வு இயக்கம் உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகளிலும், சா்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பு, பேரிடா் மீட்சிக்கான உள்கட்டமைப்பு கூட்டமைப்பு போன்ற சா்வதேச முன்னெடுப்புகளிலும் இந்த உணா்வு பிரதிபலிக்கிறது’ என்று எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.