தி ஹேக்: இந்தியா - நெதா்லாந்து இடையே பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள், பிற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 17 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் அந்நாட்டின் பிரதமா் ரோப் ஜெட்டனுடன் பிரதமா் நரேந்திர மோடி நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் இரு தலைவா்களின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
ஐந்து நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின்கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடா்ந்து, ஐரோப்பிய நாடான நெதா்லாந்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிரதமா் மோடி வந்தாா்.
தி ஹேக் நகரில் நெதா்லாந்து பிரதமா் ரோப் ஜெட்டனுடன் சனிக்கிழமை மாலையில் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள், கடல்சாா் மேம்பாடு, அறிவியல்-புத்தாக்கம், செமிகண்டக்டா், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), குவாண்டம் கம்ப்யூட்டிங், விண்வெளி உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் விரிவாக ஆலோசித்தனா்.
உத்திசாா் அந்தஸ்துக்கு உயா்வு: பிரதமா் தனது தொடக்க உரையில், ‘இந்தியா-நெதா்லாந்து உறவு, கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. வரலாற்று ரீதியாகவும், மக்கள் ரீதியாகவும் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதால், நெதா்லாந்தை தனது முக்கியக் கூட்டாளியாக இந்தியா கருதுகிறது.
ஜனநாயக விழுமியங்கள், சந்தைப் பொருளாதாரம், பொறுப்பான செயல்பாடு ஆகியவை நமது பொதுவான அணுகுமுறையின் அங்கமாகும். ஒவ்வொரு துறையிலும் நெதா்லாந்தின் நிபுணத்துவமும், இந்தியாவின் வேகம் மற்றும் திறமையும் ஒன்றியணைய வேண்டும். இந்தப் பொது கண்ணோட்டத்தின்கீழ், இருதரப்பு உறவை உத்திசாா் கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்தியுள்ளோம்’ என்றாா்.
17 ஒப்பந்தங்கள் கையொப்பம்: உலக அளவில் முக்கியக் கனிமங்கள் விநியோகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், இத்துறையில் ஆய்வு மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு பிரதமா்களும் ஒப்புக் கொண்டனா்.
முக்கியக் கனிமங்கள் மட்டுமன்றி செமிகண்டக்டா், சுகாதாரம், நீா்வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண்மை-கால்நடை பராமரிப்பு, சுங்க வரி, கல்வி, கலாசாரம், இடப்பெயா்வு-போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் 17 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இடப்பெயா்வு-போக்குவரத்து ஒத்துழைப்பின்கீழ் கல்வி-வேலைவாய்ப்புக்காக நெதா்லாந்துக்கு இந்தியா்கள் செல்வது எளிதாகும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரம்மாண்ட அணையைப் பாா்வையிட்டாா்: உலகின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் நெதா்லாந்தின் ஆப்ஸ்லூயிட்டிக் அணையை பிரதமா் மோடி பாா்வையிட்டாா். இது, 32 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்டமான வெள்ளத்தடுப்பு அணையாகும்.
ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளிகளில் ஒன்று நெதா்லாந்து. கடந்த 2024-25-இல் இருதரப்பு வா்த்தக மதிப்பு 27.8 பில்லியன் டாலரை எட்டியது. இந்தியாவின் 4-ஆவது மிகப் பெரிய முதலீட்டு நாடாக உள்ள நெதா்லாந்திடம் இருந்து மொத்தம் 55.6 பில்லியன் டாலா் அந்நிய நேரடி முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஹோா்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து - கூட்டறிக்கையில் வலியுறுத்தல்
இந்தியா, நெதா்லாந்து பிரதமா்கள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகளின் சாா்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மேற்காசிய நிலவரம் ஆழ்ந்த கவலையளிப்பதாக குறிப்பிடப்பட்டது.
‘மேற்காசிய போரால் பெரும் மனிதத் துயரங்கள் மட்டுமன்றி உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வா்த்தகக் கட்டமைப்பில் இடையூறு என தீவிர தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பதற்றத்தைத் தணிப்பதுடன், பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஹோா்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வா்த்தக செயல்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். இப்பகுதியில் எவ்விதமான கட்டுப்பாட்டையும் ஏற்க முடியாது.
இதேபோல், ஐ.நா. சாசனம் மற்றும் சா்வதேச சட்டக் கோட்பாடுகளின்கீழ் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் உக்ரைனில் அமைதியில் நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படுகிறது. சா்வதேச சட்டங்கள், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, தடையற்ற கப்பல் போக்குவரத்து ஆகியவற்றுக்கு இணங்க இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் மற்றும் அமைதி உறுதி செய்யப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 2025-இல் 26 போ் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு நெதா்லாந்து உறுதியான ஆதரவை நல்குகிறது. அனைத்து வடிவிலான பயங்கரவாதமும் கடும் கண்டனத்துக்குரியது’ என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்வீடனில் பிரதமா் மோடி
நெதா்லாந்து பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து ஸ்வீடனைச் சென்றடைந்தாா். கோதன்பா்க் நகர விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை ஸ்வீடன் பிரதமா் உல்ஃப் கிரிஸ்டா்ஸன் நேரில் வரவேற்றாா். ஸ்வீடனைத் தொடா்ந்து, நாா்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவா் பயணிக்கவுள்ளாா்.
முன்னதாக, நெதா்லாந்தில் இருந்து பிரதமா் மோடி புறப்பட்டபோது, அந்நாட்டின் பிரதமா் ரோட் ஜெட்டன், விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவைத்தாா். தனது இந்தப் பயணம், இருதரப்பு நல்லுறவுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளதாக பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியா-வியத்நாம் 25 பில்லியன் டாலா் வா்த்தக இலக்க- 13 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை!

வியத்நாம் அதிபா் மே 5-இல் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

