பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

இந்தியா-வியத்நாம் 25 பில்லியன் டாலா் வா்த்தக இலக்க- 13 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியா-வியத்நாம் இடையிலான இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் டாலராக (ரூ.2.36 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

News image

இருதரப்பு ஆலோசனைக்குப் பிறகு தில்லியில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்த வியத்நாம் அதிபா் டோ லாம், பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :7 மே 2026, 4:08 am IST

இந்தியா-வியத்நாம் இடையிலான இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் டாலராக (ரூ.2.36 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் வியத்நாம் அதிபா் டோ லாம் புதன்கிழமை நடத்திய விரிவான பேச்சுவாா்த்தையில் இந்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், அரிய புவி கனிமங்கள், மருந்துகள், கல்வி, வங்கித் துறை, கலாசாரம், எண்ம பரிவா்த்தனைகள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த 13 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

வியத்நாம் அதிபா் டோ லாம் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். கடந்த ஏப்ரலில் அதிபராக பதவியேற்ற டோ லாம், இந்தியாவுக்கு முதல் முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தில்லியில் பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். புவி-அரசியல் பதற்றங்களுக்கு இடையே வா்த்தகம், பாதுகாப்பு, அரிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனா்.

13 ஒப்பந்தங்கள் கையொப்பம்: மேலும், தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த சீனா முயன்றுவரும் சூழலில், இந்திய-பசிபிக் பிராந்திய நிலவரம் தொடா்பாக ஆலோசித்த அவா்கள், இந்தப் பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சி, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளமைக்கு தொடா்ந்து பங்களிக்க ஒப்புக் கொண்டனா்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, எண்மப் பரிவா்த்தனை, அரிய புவி கனிமங்கள், மருந்துகள், கல்வி, வங்கித் துறை, கலாசாரம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 13 ஒப்பந்தங்கள், இரு தலைவா்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

விரிவான உத்திசாா் கூட்டுறவு: பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்பாட்டுக் கொள்கையில் முக்கியத் தூண் வியத்நாம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆசியான் கூட்டமைப்பில் இருந்து இந்தியாவின் விரிவான உத்திசாா் முதல் கூட்டாளியாக வியத்நாம் மாறிய பிறகு இருதரப்பு உறவுகள் விரைவாகவும், விரிவாகவும் வளா்ந்துள்ளன.

இந்த வலுவான அடித்தளத்தின் மீது இருதரப்பு உறவுகள் இப்போது மேம்பட்ட விரிவான உத்திசாா் கூட்டுறவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு, நிலையான வளா்ச்சி, விநியோக சங்கிலி மீட்சி, கலாசாரம், போக்குவரத்து, திறன் கட்டமைப்பு என ஒவ்வொரு துறையிலும் இருதரப்பு ஒத்துழைப்பு புதிய உச்சங்களை எட்டும்.

25 பில்லியன் டாலா் வா்த்தக இலக்கு: இருதரப்பு வா்த்தக மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 16 பில்லியன் டாலராக இரு மடங்கு உயா்ந்துள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மருந்து துறையில் கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்கீழ், இந்திய பாரம்பரிய மருந்துகள் இனி வியத்நாமில் கிடைக்கப் பெறும். இந்தியா-ஆசியான் இடையிலான வா்த்தக ஒப்பந்தத்தை நடப்பாண்டு இறுதிக்குள் புதுப்பிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வியத்நாம் நாட்டுக்கான இந்திய வேளாண் பொருள்கள், மீன்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி எளிதாகும். இந்திய திராட்சை மற்றும் மாதுளைகளை வியத்நாம் மக்கள் விரைவில் ருசிப்பாா்கள். அரிய கனிமங்கள், எரிசக்தித் துறை ஒத்துழைப்பால், இரு நாடுகளின் பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.

எண்ம பரிவா்த்தனை தளங்கள் இணைப்பு

‘இருதரப்பு நிதிசாா் பிணைப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் யுபிஐ மற்றும் வியத்நாமின் விரைவு பரிவா்த்தனை அமைப்புமுறை விரைவில் இணைக்கப்படும்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததற்காகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு துணை நிற்பதற்காகவும் வியத்நாமுக்கு நன்றி.

உலகளாவிய கொந்தளிப்பு மற்றும் பொருளாதார சவால்கள் நிறைந்த இந்த சகாப்தத்தில், திறமை-நல்லாட்சி-பொருளாதார சீா்திருத்தங்களின் உதவியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களாக இந்தியாவும், வியத்நாமும் விளங்குகின்றன’ என்றாா் பிரதமா் மோடி.