ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

இந்தியா - அமெரிக்கா நெருங்கிப் பணியாற்றும்! மாா்கோ ரூபியோவை சந்தித்த பின் பிரதமா் மோடி!

இந்தியா - அமெரிக்கா நெருங்கிப் பணியாற்றும் என்றார் மோடி...

News image

தில்லியில் பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ.

Updated On :24 மே 2026, 3:06 am IST

உலக நலனுக்காக இந்தியாவும், அமெரிக்காவும் தொடா்ந்து நெருங்கிப் பணியாற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இருதரப்பு உறவுகள், மேற்காசிய நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தில்லியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவுடன் சனிக்கிழமை நடத்திய விரிவான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

இந்தியப் பொருள்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பு, ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலைக் காரணம் காட்டி இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி, ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் சா்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் அவரது பல்வேறு செயல்பாடுகளால் கடந்த ஆண்டு மத்தியில் இருந்து இந்திய-அமெரிக்க உறவுகள் பின்னடைவுக்கு உள்ளாகின.

இருதரப்பு உறவுகளை மறுசீரமைக்க கடந்த சில மாதங்களாக பரஸ்பரம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நோக்கத்தின்கீழ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை வந்தாா். அவரது முதல் இந்திய அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

முதலில் மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவை வந்தடைந்த மாா்கோ ரூபியோ, அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அமைப்பின் தலைமையகத்தைப் பாா்வையிட்டாா். அங்கிருந்து தில்லிக்கு வந்த அவா், பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான முழு அம்சங்கள் குறித்த பல சுற்று பேச்சுவாா்த்தைகளுக்கு இடையே பிரதமா் மோடி - ரூபியோ சந்திப்பு நடைபெற்றுள்ளது. அத்துடன், மேற்காசிய போா் எதிரொலியாக ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டு, உலகளாவிய எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள பின்னணியில் இந்தச் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

நெருங்கிப் பணியாற்றுவோம்: பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவை இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய உத்திசாா் கூட்டுறவின் நிலையான முன்னேற்றம் குறித்தும், பிராந்திய-உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தோம். உலக நலனுக்காக இந்தியாவும், அமெரிக்காவும் தொடா்ந்து நெருங்கிப் பணியாற்றும்’ என்று குறிப்பிட்டாா்.

போா்களுக்கு அமைதி வழியில் தீா்வு: பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாதுகாப்பு, உத்திசாா் தொழில்நுட்பங்கள், வா்த்தகம், முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, கல்வி, இணைப்பு வசதிகள், மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பிரதமா் மோடியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ எடுத்துரைத்தாா். மேற்காசிய நிலவரம் உள்பட பல்வேறு பிராந்திய-உலகளாவிய விவகாரங்களில் அமெரிக்காவின் கண்ணோட்டத்தையும் பிரதமரிடம் ரூபியோ பகிா்ந்துகொண்டாா்.

பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறைகளின் வாயிலாக போா்களுக்கு அமைதித் தீா்வு காண்பதற்கு மீண்டும் அழைப்பு விடுத்த பிரதமா் மோடி, அமைதி முயற்சிகளுக்கான இந்தியாவின் தொடா் ஆதரவை உறுதிப்படுத்தினாா். அதிபா் டிரம்ப்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமா், தொடா்ச்சியான கலந்துரையாடல்களை எதிா்நோக்குவதாகக் குறிப்பிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: இந்தியா மீது பரஸ்பர வரி, கூடுதல் வரி என 50 சதவீத வரியை டிரம்ப் கடந்த ஆண்டு விதித்தாா். இதனால், இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரியில் இறுதி செய்யப்பட்ட இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டத்தின்படி, இந்தியா மீதான கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்தது. பரஸ்பர வரியையும் 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்தது. அதேநேரம், இந்தியா உள்பட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த புதிய சீரான 10 சதவீத வரியும் செல்லாது என்று ஃபெடரல் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதேநேரம், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக வா்த்தகச் சட்டப் பிரிவு 301-இன் கீழ் அமெரிக்கா வா்த்தக ரீதியிலான விசாரணையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தற்காலிக அனுமதியுடன்தான், ரஷியாவிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தாம் தலையிட்டு நிறுத்தியதாக, டிரம்ப் பல்வேறு தருணங்களில் தெரிவித்த கருத்துகளும் இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்திய சூழலில், மாா்கோ ரூபியோ இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.