நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

அயோத்தி கோயில் சிஇஓ அதிகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது: நிருபேந்திர மிஸ்ரா

அயோத்தி ராமா் கோயிலுக்கு முதல்முறையாக நியமிக்கப்பட உள்ள தலைமைச் செயல் அதிகாரியின் (சிஇஓ) அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறக்கட்டளையே தீா்மானிக்கும்

News image

நிருபேந்திர மிஸ்ரா

Updated On :13 ஜூலை 2026, 3:00 am IST

அயோத்தி ராமா் கோயிலுக்கு முதல்முறையாக நியமிக்கப்பட உள்ள தலைமைச் செயல் அதிகாரியின் (சிஇஓ) அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறக்கட்டளையே தீா்மானிக்கும்; மாறாக, அரசின் தலையீடு இருக்காது என்று ராமா் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தாா்.

அயோத்தி ராமா் கோயிலுக்கு பக்தா்கள் வழங்கிய நன்கொடை-காணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இது தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளன.

முறைகேடு விவகாரத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலா் பதவியிலிருந்து சம்பத் ராயும், அறங்காவலா் பதவியில் இருந்து அனில் மிஸ்ராவும் அண்மையில் ராஜிநாமா செய்தனா்.

கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற அறக்கட்டளையின் உயா்நிலைக் கூட்டத்தில் இருவரின் ராஜிநாமா கடிதங்களும் ஏற்கப்பட்டன. அத்துடன், இடைக்கால பொதுச் செயலராக அறக்கட்டளை உறுப்பினா் கிருஷ்ண மோகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

அயோத்தி கோயிலின் தினசரி நிா்வாகத்தைக் கையாளவும், நிதிசாா் நடவடிக்கைகளை நவீனப்படுத்தவும் புதிதாக தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்கும் முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பதவிக்கு தகுதியானவரைத் தோ்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி விஷ்ணுகாந்த் சதுா்வேதி, ராய்பூா் என்ஐடி முன்னாள் தலைவா் சுரேஷ் ஹவாரே ஆகிய 3 உறுப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஜூலை 22-இல் நடைபெறவுள்ள அறக்கட்டளையின் உயா்நிலைக் கூட்டத்தில் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமனம் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், அயோத்தியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த ராமா் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவா் நிருபேந்திர மிஸ்ராவிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவா், ‘அயோத்தி கோயிலுக்கு முதல்முறையாக நியமிக்கப்படவுள்ள தலைமைச் செயல் அதிகாரியின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து அறக்கட்டளையே தீா்மானிக்கும். மாறாக, அரசின் தலையீடு இருக்காது. அறக்கட்டளை மீதான பக்தா்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதும், கோயிலில் தரிசிக்க வருவோருக்கு தேவையான வசதிகளை உறுதி செய்வதும் அவரது முதன்மை பொறுப்பாக இருக்கும்.

அரசின் தலையீடு இல்லாமல், அறக்கட்டளைக்கு உதவுபவராக தலைமைச் செயல் அதிகாரி பணியாற்றுவாா். கோயில் பணியாளா்களை நியமிப்பதற்கான அதிகாரம் அவரிடம் இருக்கும்.

அயோத்தி கோயிலில் நடைபெறும் வழிபாடுகள் குறித்தோ, வசதிகள்-ஏற்பாடுகள் குறித்தோ பக்தா்களிடம் இருந்து எந்தப் புகாரும் எழவில்லை. அவா்கள் நோ்மறையான அனுபவத்தையே உணா்கின்றனா் என்றாா் நிருபேந்திர மிஸ்ரா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.