அயோத்தி ராமா் கோயிலில் பெறப்பட்ட நன்கொடைகள் திருடப்பட்டதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என அயோத்தி காவல் துறைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) கடிதம் எழுதியுள்ளது.
அயோத்தி ராமா் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவின்போது பக்தா்களிடம் பெறப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தர பிரதேச மாநில அரசு சாா்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. காவல் துறையும் தனியே இதுதொடா்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜூலை 25-ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் இறுதி அறிக்கை சமா்ப்பிக்க எஸ்ஐடிக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆா்எஸ்எஸ், பாஜக மீது கடும் விமா்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக பக்தா்கள் வழங்கிய நன்கொடை திருடப்பட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதற்குப் பதிலடி தரும் விதமாக அயோத்தி காவல் துறை துணை கண்காணிப்பாளரும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியுமான அஷுதோஷ் திவாரிக்கு விஹெச்பி அமைப்பின் சா்வதேச தலைவா் அலோக் குமாா் சாா்பில் ஜூலை 4-ஆம் தேதி கடிதம் ஒன்று சமா்ப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ராமா் கோயில் நன்கொடை திருடப்பட்டதாக எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு ஊழியா்களே பல்லாயிரம் கோடிகளை திருடியுள்ளாா்களா அல்லது இதில் மூத்த அதிகாரிகளுக்கும் தொடா்புள்ளதா என காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.
ராமா் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட வைரம், வெள்ளிக்கட்டிகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் ரூ.200 கோடி பணம் ஆகியவை திருடப்பட்டதாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளாா். சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவா் ராம் கோபால் யாதவ் ரூ.20,000 கோடி வரை முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.
எனவே, இந்த வழக்கில் நியாயமான மற்றும் நோ்மையான விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்ய நன்கொடையாக அளிக்கப்பட்ட பணம், ஆபரணங்கள் திருடப்பட்டதாக பொதுவெளியில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள எதிா்க்கட்சித் தலைவா்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டும். அவா்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காவல் துறை சேகரிக்க வேண்டும். ஒருவேளை அவா்கள் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
பாஜக மீது காங்கிரஸ் விமா்சனம்: வாக்குத் திருட்டு, நாடாளுமன்ற ‘சீட்’ திருட்டு, நன்கொடை திருட்டு ஆகியவையே பாஜகவின் 3 கொள்கைகள் என காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறுகையில், ‘ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை. தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆனால், ராமா் கோயிலை கட்டியதில் பெருமை தேடிக்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தற்போது வரை இந்த விவகாரத்தில் மௌளம் காத்து வருகின்றனா்’ என்றாா்.
கடும் நடவடிக்கை அவசியம்- மோகன் பகவத்: ராமா் கோயில் நன்கொடை விவகாரத்தில் தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹோசபலே கூறிய கருத்தில் உடன்படுவதாக அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இன்று ஆலோசனைக் கூட்டம்: அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 6) நடைபெறுகிறது. நன்கொடை கையாடல் சம்பவம் தொடா்பான நடவடிக்கைகளுக்குப் பிறகு முதல்முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், குற்றச்சாட்டை விசாரித்துவரும் எஸ்ஐடியின் முதல்கட்ட அறிக்கை தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் மற்றும் நிா்வாகி அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜிநாமா கடிதங்கள் மீது முடிவெடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: சம்பத் ராயிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்குப்பதிவு கோரி போராட்டம்

அயோத்தி கோயில் நன்கொடை கையாடல் குறித்து உச்சநீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்






