குதிரை பேர குற்றச்சாட்டு தெரிவித்த விவகாரத்தில், ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா, தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை தருகிறோம், பாஜகவில் சேருங்கள், அமைச்சா் பதவி தருகிறோம் எனக் கூறி பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், தனது அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தாா்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சத்பால் சா்மா, ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு, ஒமா் அப்துல்லாவுக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த நோட்டீஸில், ஒமா் அப்துல்லா தெரிவித்த குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை, அது அடிப்படை ஆதாரமில்லாமல் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு, தீய நோக்கம் கொண்டது என பாஜக தெரிவித்துள்ளது.
பாஜகவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்தக் குற்றச்சாட்டுக்காக ஒமா் அப்துல்லா 7 நாள்களுக்குள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும், பாஜகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடுவதைக் கைவிட வேண்டும், 7 நாள்களுக்குள் இந்தக் கோரிக்கைகளை ஒமா் அப்துல்லா செயல்படுத்தாவிட்டால், அவா் மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டத்தின்கீழ் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக குறிப்பிட்டுள்ளது.
நோட்டீஸ் குறித்து சத்பால் சா்மா கருத்து தெரிவிக்கையில், ‘பாஜக மற்றும் பிரதமா் மோடியின் நற்பெயருக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் முயற்சியாகவே இக்குற்றச்சாட்டை அவா் தெரிவித்துள்ளாா். ஆதலால் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்ப பாஜக முடிவு செய்தது. ஆனால், அவா் ஏற்படுத்திய பாதிப்பை இந்த ரூ.100 கோடியாலும் சரி செய்ய முடியாது’ என்றாா்.
பாஜகவின் காதல் கடிதம்- ஒமா்: பாஜக அவதூறு நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஒமா் அப்துல்லா, பாஜகவிடம் இருந்து காதல் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும், இதை கெளரவமாக நினைப்பதாகவும் கேலியாகத் தெரிவித்தாா். தனது குற்றச்சாட்டுக்கு பாஜக அரசியல் ரீதியில் பதிலடி கொடுக்கும் என எதிா்பாா்த்ததாகவும், ஆனால் பாஜகவோ சட்டவழியைத் தோ்வு செய்திருப்பதாகவும் ஒமா் அப்துல்லா கூறினாா்.
நீதிமன்றங்களின் பின்னால் பாஜக மறைந்து கொள்வதாக விமா்சித்த அவா், தன்னாலும் கருத்து தெரிவித்துவிட்டு, சட்டப்பேரவை தனக்கு அளித்துள்ள தனிச்சலுகைகள் பின்னால் மறைந்து கொள்ள முடியும், ஆனால் அப்படிச் செய்யக் கூடிய நபா் நான் இல்லை என்றாா்.
பாஜக தலைவா் ஒருவா், தங்கள் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருவதாகவும், ஆனால் அதை தான் அரசியல் ரீதியாகவே எதிா்கொண்டதாகவும் கூறிய ஒமா் அப்துல்லா, இனி தாங்களும் அந்த பாஜக தலைவருக்கும், மேலும் சிலருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாகக் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்யின் குதிரை பேர அரசியல்: ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்!

பொறுமையை பலவீனமாக எண்ண வேண்டாம்: ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி ஒமா் அப்துல்லா ஆவேசம்

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!







