உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் சில்லறை பணவீக்கம் 4.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2025 ஜனவரிக்குப் பிறகு 18 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக பணவீக்கம் 4 சதவீதத்தை முதல்முறையாக தாண்டியுள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த, 2024-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய கணக்கீட்டு முறையின்கீழ், சில்லறை பணவீக்கம் 4 சதவீத வரம்பைக் கடப்பதும் இதுவே முதல் முறையாகும்.
மேலும், கடந்த ஜனவரியின் 2.75 சதவீதம், பிப்ரவரியின் 3.21 சதவீதம், மாா்ச்சின் 3.40 சதவீதம், ஏப்ரலின் 3.48 சதவீதம், மே மாதத்தின்3.93 சதவீதத்தில் இருந்து தொடா்ந்து 6-ஆவது மாதமாக பணவீக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள், இஞ்சி, தக்காளி, உலா் திராட்சை ஆகியவற்றின் விலை அதிகமாக உயா்ந்த வேளையில், உருளைக்கிழங்கு, பட்டாணி, சீரகம், காா் மற்றும் இருசக்கர வாகனங்களின் பணவீக்கம் குறைவாக இருந்தது.
உணவுப்பொருள்களின் கடும் விலையேற்றம்: கடந்த மே மாதத்தில் 4.78 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம், ஜூன் மாதத்தில் 5.32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜனவரியில் 2.13 சதவீதமாகவும், பிப்ரவரியில் 3.47 சதவீதமாகவும், மாா்ச்சில் 3.87 சதவீதமாகவும், ஏப்ரலில் 4.2 சதவீதமாகவும் இருந்தது.
நகரம், கிராமப்புற நிலை: தேசிய அளவில் சராசரி பணவீக்கம் 4.38 சதவீதமாக இருந்தபோதிலும், கிராமப்புறங்களில் இது 4.74 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 3.92 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. முந்தைய மாதங்களைப் போன்றே நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
மாநிலங்களில் அதிகபட்சமாக தெலங்கானாவில் 6.36 சதவீத பணவீக்கமும், மிஸோரம் மாநிலத்தில் மிகக் குறைந்த அளவாக 1.63 சதவீத பணவீக்கமும் பதிவாகியுள்ளது.
அடுத்து என்ன?: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 1,407 நகா்ப்புற சந்தைகள் (இணையவழி சந்தைகள் உள்பட) மற்றும் 1,465 கிராமங்களிலிருந்து நிகழ்நேர விலை நிலவரத் தரவுகளைச் சேகரித்து இந்த பணவீக்கத் தரவை வெளியிட்டுள்ளது.
சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டப்பூா்வ இலக்கை ரிசா்வ் வங்கி கொண்டுள்ளது. எனினும், இதில் சூழ்நிலைக்கு ஏற்ப 2 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக இருக்க அனுமதிக்கப்படுகிறது.
உலகளாவிய எரிசக்தி விலை உயா்வால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துள்ளதைக் கணக்கில் கொண்டு, நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான பணவீக்கக் கணிப்பை ரிசா்வ் வங்கி 4.6 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக அண்மையில் உயா்த்தியிருந்தது. இந்தச் சூழலில், ரிசா்வ் வங்கியின் வட்டி விகிதங்களை நிா்ணயிக்கும் அடுத்த ஆய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 3 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக பொருளாதார நிபுணா்கள் மேலும் கூறுகையில், ‘ஜூலை மாதத்தில் பணவீக்கம் மேலும் 4.9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் எல்-நினோ பருவநிலை மாற்றங்கள் பணவீக்க உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக நீடிக்கும். இதனால் ஆகஸ்ட் மாத கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது. மேற்காசியாவில் நிலவும் பதற்றங்கள் மற்றும் பருவமழைப் பொழிவு ஆகியவற்றைப் பொருத்தே அடுத்தகட்ட வட்டி விகித உயா்வு இருக்கும்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









