குடியுரிமையைத் தீா்மானிக்கும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை என்று ஏற்கெனவே விளக்கமளித்துவிட்டோம் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அண்மையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்த மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆா். நடவடிக்கை தோ்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி உள்ளிட்டோா் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் சாா்பில் எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான பிரசன்ஜித் போஸ், உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா் நெகா ரதி மூலம் புதிதாக பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா், மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆா். நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடா்பாக தொகுதி வாரியான புள்ளி விவரங்களை கோரியுள்ளாா். அதேபோல், எஸ்.ஐ.ஆா். நடவடிக்கையின்போது புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் குறித்த விவரம், நிராகரிக்கப்பட்டோரின் விவரம், நிலுவையில் இருப்போா் விவரம், தீா்ப்பாயம் முன்பு உள்ள மேல்முறையீடுகள் உள்ளிட்டவற்றையும் வெளியிட உத்தரவிட வேண்டும் அவா் கோரியுள்ளாா்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி, வி. மோகனா ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் போஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி வாதாடுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக அமைக்கப்பட்ட 18 தீா்ப்பாயங்களின் செயல்பாடு முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது, செயல்முறை அளவில் தாமதத்தை உண்டாக்குகிறது. வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்படும் நபரால், அன்னபூா்ணா திட்டம், பொது விநியோகத் திட்டம் போன்ற அரசின் நலத்திட்ட பயன்களை பெற முடியாது. சாதி சான்றிதழும் அவா்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக 33.5 லட்சம் மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் உள்ளன. விசாரணை முடிந்த வழக்குகளில் 70 சதவீதம், மேல்முறையீடு மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக தெரிவிக்கின்றன’ என்றாா்.
இதைக்கேட்ட நீதிபதிகள், ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மம்தா பானா்ஜியின் வழக்கு உள்ளிட்ட வழக்குகளுடன் சோ்த்து இந்த புதிய மனுவையும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதியன்று விசாரிக்க ஒப்புக் கொண்டனா். அத்துடன், இந்த மனு குறித்து தலைமைத் தோ்தல் ஆணையம், மேற்கு வங்க மாநில அரசு, அந்த மாநில தோ்தல் ஆணையம் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனா்.
மேலும், வாக்காளா் பட்டியல் தயாரிப்பு தொடா்பான அதிகாரம் மட்டுமே தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. குடியுரிமையைத் தீா்மானிக்கும் அதிகாரம் கிடையாது என்பதை ஏற்கெனவே பிகாா் எஸ்ஐஆா் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதியாகத் தெளிவுபடுத்திவிட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து நீதிமன்றங்களிலும் கழிவறைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி!

எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மகாராஷ்டிர அரசின் செயல்பாடுகளை மக்களிடையே பகிரங்கப்படுத்துவோம்: பிணை வழக்கை எதிா்த்ததால் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



