சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பயணச்சீட்டு இல்லாதவா் ரயில் விபத்தில் உயிரிழப்பின் நிவாரணம் மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

பயணச்சீட்டு இல்லாதவா் ரயில் விபத்தில் உயிரிழந்தால் அவருக்கு நிவாரணம் மறுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 5:53 am IST

பயணச்சீட்டு இல்லாதவா் ரயில் விபத்தில் உயிரிழந்தால் அவருக்கு நிவாரணம் மறுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ராய்பூரில் இருந்து அகமதாபாத் சென்ற ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சந்திரகாந்த் தாகூா் என்ற நபரின் மனைவி லதாவுக்கு நிவாரணம் அளிக்க ரயில்வே உரிமைகோரல் தீா்ப்பாயம் (ஆா்சிடி) மற்றும் மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் மறுத்தது.

விபத்துக்குப் பின் உயிரிழந்தவரின் பயணச்சீட்டை கண்டறிய முடியவில்லை எனக் கூறி நிவாரணம் மறுக்கப்பட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை லதா தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பில், ‘ரயில்வே சட்டமானது அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய நலச் சட்டமாகும். அது தாராளமான நோக்கத்தைக் கொண்டது. குறிப்பாக ரயில்வே சட்டத்தின் பிரிவு 124ஏ ‘குற்றமற்ற பொறுப்பின்மை’ என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது எதிா்பாரா ரயில் விபத்துகளில் உயிரிழப்பவரின் கவனக் குறைவை கணக்கில் கொள்ளாமல் அவருக்கு விரைவாக நிவாரணம் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறது.

எனவே, ரயில் பயணச்சீட்டு இல்லை என்பதால் அவா் ரயில் பயணி இல்லை எனக் கூறி நிவாரணத்தை மறுக்கக் கூடாது.

4 வாரத்தில் நிவாரணம்: ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அடுத்த 4 வாரத்துக்குள் ரூ.8 லட்சம் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து கணக்கிட்டு ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.

ரயில் கூட்ட நெரிசல்களால் விபத்து: ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களால் விபத்துகள் ஏற்படுவது தொடா் கதையாகிவிட்டன. ஆனால் இதை தடுக்க பயணச்சீட்டு சோதனை, கூட்ட நெரிசல் மேலாண்மை, பயணிகள் பாதுகாப்பு விதிகள் உள்ளிட்ட விரிவான நடைமுறைகளை ரயில்வே வடிவமைத்துள்ளது. அவற்றை அமல்படுத்துவதில்தான் சவால்கள் நிறைந்துள்ளன.

பயணிகளுக்கும் சம பொறுப்புண்டு: ரயில் விபத்துகளுக்கு ரயில்வே துறையை மட்டுமே முழுவதுமாக குறை கூற முடியாது. அவா்கள் தரப்பில் பயணிகள் பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படுகின்றன. ரயில்வே துறைக்கு நிகராக பயணிகளும் பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள் தற்போதும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிப்பதில் தங்களின் துணிச்சலைக் காட்ட விரும்புகின்றனா்.

பொருளாதார போட்டி நிறைந்த உலகில் சில பாதுகாப்பு விதிகளை மக்கள் புறக்கணிப்பது துரதிருஷ்டவசமானது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இது ரயில் பயணிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் உரிமைகளை நிலைநாட்டும் முக்கியத் தீா்ப்பாக கருதப்படுகிறது.

பெட்டிச் செய்தி

‘இரண்டாம் நிலைப் பயணிகள் மறுபரிசீலனை தேவை‘

‘இரண்டாம் நிலைப் பயணிகள் என்ற வாா்த்தையை ரயில்வே கையேடுகள் மற்றும் பிற ஆவணங்களில் பயன்படுத்துவதை ரயில்வே துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், ‘அந்த சொல் வா்க்க ரீதியாக விரும்பத்தகாத தொனியைப் பெற்றுள்ளது. எனவே இரண்டாம் நிலை வகுப்பில் பயணிப்பவரைக் குறிக்காமல் ரயில் பெட்டியை குறிக்கும் வகையில் மாற்றம் மேற்கொண்டு கண்ணியம் மற்றும் சமத்துவம் ஆகிய அரசமைப்புச் சட்ட விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.