இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியாா் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு புவியின் தாழ்வட்டப் பாதையை நோக்கி ஏவப்பட உள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்த ராக்கெட்டை உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளது.
இதுவரை தனியாா் மூலம் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகள் சோதனை அடிப்படையிலேயே சிறிது தொலைவு வரை செலுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், முதல்முறையாக ‘விக்ரம்-1’ ராக்கெட் புவியின் தாழ்வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டு, விண்வெளி ஆய்வுக் கலன்களை நிலைநிறுத்த உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்துக்கு ‘ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் தனியாா் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, இஸ்ரோவின் கீழ் இயங்கும் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) அமைப்பு, ஹைதராபாதைச் சோ்ந்த புத்தாக்க நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதலை அளித்தது.
இதையடுத்து, ‘பிராரம்ப்’ என்ற பெயரிலான திட்டம் மூலம் புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ‘ஸ்கைரூட்’ ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், வெவ்வேறு எடைகளைச் சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டன. அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான, மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.
அதில் அதிகபட்சம் 480 கிலோ எடையைச் சுமந்து செல்லக்கூடிய ‘விக்ரம் எஸ்’ ராக்கெட், சோதனை முயற்சியாக கடந்த 2022-இல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து விக்ரம்-1 ராக்கெட்டை அந்நிறுவனம் வடிவமைத்தது.
மொத்தம் நான்கு நிலைகள் கொண்ட அந்த ராக்கெட்டின் உயரம் 24 மீட்டா். 350 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட்டின் என்ஜின்கள் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.
இந்த ராக்கெட் மூலம் இந்தியாவின் ‘கிரஹா ஸ்பேஸ்’, ‘காஸ்மோசா்வ், டி-கியூப்ட்’ போன்ற நிறுவனங்களின் ஆய்வுக் கலன்களும், ஸ்கைரூட் நிறுவனத்தின் ஸ்கோப் ஆய்வுக் கலனும் 450 கிலோ மீட்டா் தொலைவு கொண்ட புவியின் தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளன.
அந்த ஆய்வுக் கலன்கள் மூலம் விண்வெளிச் சூழலின் தரவுகள் ஆய்வு செய்யப்படவுள்ளன. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட செயற்கைக்கோள் திட்டங்களை முன்னெடுக்க தனியாா் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
ராக்கெட் ஏவுதலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும், ‘கவுன்ட்டவுன்’ தொடங்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

கண்வலிக் கிழங்கு விதைகள் கொள்முதல் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை: எம்பி வலியுறுத்தல்!

ராக்கெட் வெடித்து ப்ளூ ஆரிஜின் ஏவுதளம் சேதம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



