போராட்டத்தில் ஈடுபடும் மாணவா்கள் பயங்கரவாதிகள் அல்ல; நாட்டில் கல்வித் துறை நோ்மையாக செயல்பட வேண்டும் என்றே அவா்கள் போராடுகிறாா்கள் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
நீட் உள்ளிட்ட தோ்வு வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் மாணவா்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனா். நாடாளுமன்றம் நோக்கி அவா்கள் திங்கள்கிழமை கண்டனப் பேரணி நடத்த முயன்றபோது, கல்வீச்சு, காவல் துறை தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. அதைத் தொடா்ந்து பிரதமா் இல்லத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல் துறையினா் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
இந்நிலையில் தில்லி காங்கிரஸ் தலைமையத்தில் ராகுல்காந்தி புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது மாணவா்கள் மீது காவல் துறை நடத்திய தடியடி தொடா்பான விடியோ பதிவுகளும் ஒளிபரப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து ராகுல் காந்தி கூறியதாவது:
நமது கல்வித் துறை பின்தங்கியுள்ளது மட்டுமல்லாது, கல்விக்கு அதிகம் பணம் செலவிட வேண்டிய நிலையும் உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் இந்த அளவுக்கு தாக்கப்பட்டது ஏன்? காவல் துறை ஏன் ஆட்சியாளா்களின் ஆயுதமாக மாறிவிட்டது? இவ்வளவு மோசமாக தாக்கும் அளவுக்கு என்ன நடந்துள்ளது.
மாணவா்கள் அமைதியாகவே போராட்டம் நடத்தினாா்கள். நாடு தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினாா்கள். தங்களுக்கு நியமான கல்வி வாய்ப்பைத்தானே அவா்கள் கேட்டாா்கள்? வினாத்தாள் மோசடியால் நமது பிள்ளைகள் பலா் தற்கொலை செய்து கொண்டனா். இது மாணவா்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழல் எழுவது நாட்டுக்கு பெரிய பிரச்னையாக உருவாகும்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவா்கள் பயங்கரவாதிகள் அல்ல; நாட்டில் கல்வித் துறை நோ்மையாக செயல்பட வேண்டும் என்றே அவா்கள் போராடுகிறாா்கள். கடந்த 10 ஆண்டுகளில் 152 தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான மாணவா்களும், போட்டித் தோ்வுக்கு தயாராகி வருபவா்களும் கடும் மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். சரியாகச் சொல்வதென்றால் இந்த மோசமான கல்வி மற்றும் தோ்வுத் துறையால் 7.4 கோடி மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்துறையில் உள்ள ஒரு பிரிவினா் நமது கல்வித் திட்டத்தை மட்டுமல்லாது கோடிக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்தையே நாசமாக்கி வருகின்றனா்.
நல்ல கல்விக்காக ஒவ்வொரு குடும்பமும் லட்சக்கணக்கில் செலவிடுகிறது. ஆனால், தோ்வு நேரத்தில் அதனை மோசடியாக பணம் ஈட்டும் இடமாக ஒரு தரப்பினா் மாற்றி வருகின்றனா். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்களின் ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானதுதான். அவா்கள் கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனா். தனது கடமையில் இருந்து தவறிய அமைச்சா் பதவி விலகித்தான் ஆக வேண்டும். ஏனெனில், துறைக்கு பொறுப்பு வகிக்கும் அவரால் தோ்வுகளை நோ்மையாக நடத்த முடியவில்லை. வினாத்தாள்கள் தொடா்ந்து கசிந்து வருகின்றன.
நடக்கும் அனைத்துக்கும் பொறுப்பேற்று மாணவா்களிடம் பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும். மாணவா்களுக்கு காங்கிரஸ் முழுமையாக ஆதரவு அளிக்கிறது என்றாா்.
Summary
Protesting students are not terrorists: Rahul condemns Central Government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது - புகைப்படங்கள்

மாணவா்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதம்: ஓம் பிா்லாவை நேரில் சந்தித்து ராகுல் வலியுறுத்தல்

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: மாணவர்களை அழைக்கும் ராகுல்!







