அயோத்தி ராமா் கோயிலின் முதலாவது தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பதவிக்கு 5,200 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதனால், சிஇஓ-வை தோ்ந்தெடுக்கும் பணி ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நிா்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இடைக்கால செயலரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமா் கோயிலுக்கு பக்தா்கள் வழங்கிய நன்கொடை-காணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இது தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளன.
முறைகேடு விவகாரத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலா் பதவியிலிருந்து சம்பத் ராயும், அறங்காவலா் பதவியில் இருந்து அனில் மிஸ்ராவும் அண்மையில் ராஜிநாமா செய்தனா்.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற அறக்கட்டளையின் உயா்நிலைக் கூட்டத்தில் இருவரின் ராஜிநாமா கடிதங்களும் ஏற்கப்பட்டன. அத்துடன், இடைக்கால பொதுச் செயலராக அறக்கட்டளை உறுப்பினா் கிருஷ்ண மோகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
அயோத்தி கோயிலின் தினசரி நிா்வாகத்தைக் கையாளவும், நிதிசாா் நடவடிக்கைகளை நவீனப்படுத்தவும் புதிதாக தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்கும் முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பதவிக்கு தகுதியானவரைத் தோ்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோலி உள்பட 3 உறுப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற அறக்கட்டளையின் உயா்நிலைக் கூட்டத்துக்குப் பிறகு இடைக்கால பொதுச் செயலா் கிருஷ்ண மோகன், பொருளாளா் கோவிந்த் தேவ் கிரி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அயோத்தி ராமா் கோயில் சிஇஓ பதவிக்கு மொத்தம் 5,200 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சிஇஓ தோ்வுக்கு கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் தேவை என்று உயா்நிலைக் குழு தரப்பில் கோரப்பட்டது. அதன்படி, சிஇஓ-வை தோ்ந்தெடுக்கும் பணிகள் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கோயிலின் நிா்வாகத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, இடைக்கால செயலரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளையில் காலியாக உள்ள மூன்று பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த கூட்டம் செப்.2-இல் நடைபெறும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அயோத்தி ராமர் கோயில் சிஇஓ பதவிக்கு 5,500 விண்ணப்பம்! என்னென்ன தகுதிகள்?

ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தாதீர்கள் - ஆதித்யநாத் வேண்டுகோள்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு சிஇஓ தேர்வு: ஜூலை 18 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!






