அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பகுதியில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலங்களை பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சான் வாங்கியிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோததியில் மிகப் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பின்னர், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, அயோத்தி நகரின் சுற்றுப்பகுதிகளில் நிலங்களை வாங்க பலரும் முனைப்புக் காட்டி வருவதால், நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இந்த நிலையில், 'தி ஹவுஸ் ஆஃப் அபினந்தன் லோதா' என்ற நிறுவனத்திடமிருந்து கிட்டத்தட்ட ரூ. 100 கோடி மதிப்பிலான நிலங்களை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அபினந்தன் லோதா தெரிவித்துள்ளார்.
அயோத்தியிலுள்ள அமிதாப் பச்சனின் சொத்துகள்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் நடத்திய ரியல் எஸ்டேட் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தொழிலதிபர் அபினந்தன் லோதா, அயோத்தியில் அமிதாப் பச்சனின் முதலீடுகள் குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அந்த தகவல்படி, அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, அதாவது 2023 ஆம் ஆண்டு முதன்முதலில் அபினந்தன் லோதா நிறுவனத்திடமிருந்து அமிதாப் பச்சன் நிலம் வாங்கியுள்ளார்.
“2023-ல் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் ஒரு எண்ணிலிருந்து சில மிஸ்டு கால்கள் வந்தது. தொடர்ந்து, நான் அமிதாப் பச்சன், உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தியும் வந்திருந்தது. உடனடியாக நான் அவரை அழைத்தேன்.
அப்போது அவர், நான் உத்தரப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்டவன். புனித நகரான அயோத்தியில் நிலம் வாங்க விரும்புகிறேன் என்றார். பின்னர், 15,000 சதுர அடி வேண்டுமென்றார். நான் ரூ. 15 கோடியாகும் என்றேன். மறுநாளே அந்த தொகையை அனுப்பிவிட்டார்” என்று அமிதாப் பச்சனுடன் தனது முதல் உரையாடலைப் பகிர்ந்துகொண்டார். படிப்படியாக அவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலங்களை வாங்கியிருக்கிறார்.
கடைசியாக கடந்த மார்ச் மாதம், ரூ. 35 கோடி மதிப்பிலான 2.67 ஏக்கர் நிலத்தை வாங்கியதன் மூலம் அயோத்தியில் தனது ரியல் எஸ்டேட் முதலீட்டை அமிதாப் பச்சன் விரிவுபடுத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, தி ஹவுஸ் ஆஃப் அபினந்தன் லோதா நிறுவனத்தின் ’தி சராயு’ திட்டத்தின் மூலம் 2024-ல், 10,000 சதுர அடி நிலத்தை ரூ. 14.5 கோடிக்கும், மே, 2025-ல் 25,000 சதுர அடி நிலத்தை ரூ. 40 கோடிக்கும் அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார்.
இதேபோல், தி சராயு திட்டத்தில் பாலிவுட் நடிகர்கள் க்ரித்தி சனோன், கார்த்திக் ஆர்யன் உள்ளிட்டோரும் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Leading actor buys up land worth Rs 100 crore in Ayodhya! Who is he?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










