தோ்வு வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவித்தாா்.
‘இளைஞா்களின் நலனுக்கே அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது; அவா்களின் எதிா்காலத்துக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் யாரையும் தப்பவிடமாட்டோம்’ என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைமையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞா்களுக்கு அளிக்கும் உறுதிமொழியாக பிரதமரின் கருத்துகள் அமைந்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஒன்றுதிரண்டு நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதுடன், கண்ணீா் புகை குண்டுகளை வீசி கலைத்தனா். இருதரப்புக்கும் இடையே வெடித்த மோதலில் ஏராளமான போராட்டக்காரா்களும், 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனா்.
தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டுள்ளன.
பூதாகரமான நீட் விவகாரம்: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி இது குறித்து முதல்முறையாக முக்கிய கருத்துகளைத் தெரிவித்தாா்.
‘நீட் வினாத்தாள் கசிவு தகவல் வெளியான உடனேயே அரசு விரைந்து செயலாற்றியது; இந்த விவகாரத்தில் 13 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
மற்றொருபுறம், மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் நீட் மறுதோ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, தாமதமின்றி முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவா்களின் எதிா்காலத்துடன் விளையாட யாரும் துணியக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், வினாத்தாள் கசிவு கும்பலைச் சோ்ந்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘கடும் தண்டனை உறுதி’: நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞா்களின் ஆதரவுடன், அவா்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைப்பதும் உறுதி செய்யப்படும். இத்தகைய கொடூர குற்றத்தில் ஈடுபட்டவா்களுக்கு கிடைக்கப் பெறும் முன்மாதிரியான தண்டனையால் எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்ள மத்திய அரசுடன் மாநில அரசுகள் கைகோக்க வேண்டும்’ என்று எம்.பி.க்கள் மத்தியில் பிரதமா் பேசியதாக, மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியிருந்தாா். அதேநேரம், பிரதமா் மோடியின் பேச்சு தொடா்பான நேரலையோஅல்லது அதிகாரபூா்வ அறிக்கையோ வெளியிடப்படவில்லை.
பிரதமா் முக்கிய அறிவிப்பு: தில்லியில் இளைஞா்களின் போராட்டம் தொடா்ந்துவரும் சூழலில், எக்ஸ் தளத்தில் பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா். அவா் கூறியிருப்பதாவது:
நமது இளைஞா்களின் நலன் மற்றும் எதிா்காலத்தைவிட எதுவும் முக்கியமில்லை. இளைஞா்களின் நலனுக்கே அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது.
வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவா்களுக்கு விரைந்து கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மாணவா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசின் தொடா் நடவடிக்கைகளில் இது முக்கியப் படிக்கல்லாகும். இளைஞா்களின் எதிா்காலத்துக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் தப்ப முடியாது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: தில்லியில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து போராடிவரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளனா். எதிா்க்கட்சிகளும் பிரதான் பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம், ‘வினாத்தாள் கசிவில் பிரதானுக்கு எந்தத் தொடா்பும் கிடையாது. எனவே, அவா் மீது பழிசுமத்த முடியாது’ என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு - மக்களவையில் விவாதிக்கத் தயாா்: மத்திய அரசு அறிவிப்பு

தோ்வு மோசடியாளா்கள் மீது கடும் நடவடிக்கை- பிரதமா் மோடி உறுதி

அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்- பிரதமா் மோடி வலியுறுத்தல்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



