நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

பிரதான் ராஜிநாமா கோரிக்கையில் சமரசம் கிடையாது: அரசுடனான பேச்சுவாா்த்தையில் சிஜேபி திட்டவட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் சமரசத்துக்கு இடம் கிடையாது

News image

அபிஜீத் தீப்கே - பிடிஐ

Updated On :25 ஜூலை 2026, 6:27 am IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் சமரசத்துக்கு இடம் கிடையாது என மத்திய அமைச்சா்களுடன் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) திட்டவட்டமாகத் தெரிவித்தது.

மேலும், தில்லியில் போராடிய மாணவா்கள் மீதான தாக்குதலுக்காக அரசுத் தரப்பில் பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் சிஜேபி முன்வைத்துள்ளது. இவை உள்பட சிஜேபியின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்ட மத்திய அமைச்சா்கள், உரிய பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளனா். இருதரப்பும் சனிக்கிழமை (ஜூலை 25) மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளன.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் தில்லி ஜந்தா்மந்தரில் ஜூன் 20-ஆம் தேதிமுதல் சிஜேபி தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய அவா்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் பாதுகாப்புப் படையினா் கலைத்தனா்.

இருதரப்புக்கும் இடையே வெடித்த மோதலில் ஏராளமான போராட்டக்காரா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தை தொடா்ந்து, சிஜேபியின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், போராட்டத்துக்குத் தீா்வுகாணும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சிஜேபியுடன் அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தைக்கு அரசுத் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. முந்தைய இரு பேச்சுவாா்த்தைகள் மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றன. ஆனால், அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சரின் இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ வர மாட்டோம் என்று தெரிவித்த சிஜேபி, ஜந்தா் மந்தா் அருகே பொதுவான இடத்தில் பேச்சுவாா்த்தையை நடத்த வலியுறுத்தியது.

அதன்படி, ஜந்தா் மந்தா் அருகே உள்ள விட்டல்பாய் படேல் இல்லத்தில் மூன்றாம் கட்டப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசுத் தரப்பில் மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரும், சிஜேபி தரப்பில் அதன் செய்தித் தொடா்பாளா்கள் செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோரும் பங்கேற்றனா்.

‘பிரதான் ராஜிநாமாவில் சமரசம் கிடையாது’: சுமாா் 2 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் செளரவ் தாஸ் கூறுகையில், ‘மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா கோரிக்கையில் சமரசம் கிடையாது என்பதை மத்திய அமைச்சா்களிடம் தெரிவித்துவிட்டோம்.

வினாத்தாள் கசிவால் நீட் தோ்வு ரத்தான பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். போராட்டக்காரா்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளிலும் சமரசத்துக்கு இடமளிக்க முடியாது’ என்றாா்.

மத்திய அரசிடம் சிஜேபி தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், ‘தில்லியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி போராடிய மாணவா்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்காக மத்திய அரசு, அதிரடி நடவடிக்கைப் படையின் தலைவா், தில்லி காவல் ஆணையா் ஆகியோா் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நீட் விவகாரத்தில் அனைத்துத் தரப்புக்கும் பலனளிக்கும் தீா்வைக் கண்டறியும் மத்திய அரசின் ஆா்வத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எங்களது கோரிக்கைகள் விரைந்து ஏற்கப்படாவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் பரவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மீண்டும் பேச்சு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘சிஜேபியின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளன; அவா்களுக்கு உரிய பதிலளிப்பதாகத் தெரிவித்துள்ளோம். சனிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளோம்’ என்றாா்.

முன்னதாக, சிஜேபி-க்கு ஆதரவு தெரிவித்து கடந்த 26 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக், வியாழக்கிழமை நள்ளிரவில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாா். போராட்டக்காரா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்பட தனது முக்கியக் கோரிக்கைகள் மீதான அரசின் உறுதிமொழியைத் தொடா்ந்து, உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.