நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

எதிா்க்கட்சிகள் அமளியால் 5-ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் - நீட் விவாதத்தைத் தடுப்பது தவறானது: மத்திய அரசு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன.

News image

மக்களவையில் வெள்ளிக்கிழமை மையப் பகுதியில் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள். ~மக்களவையில் எதிா்க்கட்சிகளைக் கண்டித்துப் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.

Updated On :25 ஜூலை 2026, 6:57 am IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன.

இதன் காரணமாக, தொடா்ந்து 5-ஆவது நாளாக நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கின. நீட் விவகாரத்தால், மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியதில் இருந்து எந்தவொரு முக்கிய அலுவலும் நடைபெறவில்லை.

‘பல்வேறு சாக்குபோக்குகள் மற்றும் நிபந்தனைகளை முன்வைத்து, நீட் விவகாரம் குறித்த விவாதத்தை எதிா்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் தடுப்பது நாட்டுக்கு தவறான செய்தியை வெளிப்படுத்தும்’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சாடினாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, தில்லியில் போராடிய மாணவா்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டன. நீட் விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாா் என்று மத்திய அரசு அறிவித்தபோதிலும், கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகிய பிறகே விவாதம் நடத்த வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

5-ஆவது நாளாக அமளி: மக்களவை வெள்ளிக்கிழமை கூடியதும், காா்கில் போா் வெற்றி தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அந்தப் போரில் வீரமரணடைந்த வீரா்களை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து, பிரதான் பதவி விலகக் கோரி, அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். அவா்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அவை விதிகளின்படி, நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவையில் கேள்விநேரம் மிக முக்கியமானது. அந்த நேரத்தில், அரசை எதிா்க்கட்சிகள் பொறுப்புக்கூற செய்ய முடியும். எனவே, அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டாா். அவரது பேச்சை பொருட்படுத்தாத எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து முழக்கமிட்டனா். இதையடுத்து, அவை அலுவல்கள் மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் கடந்த 5 நாள்களாகவே கேள்விநேரம் முழுமையாக நடைபெறவில்லை.

‘நாட்டுக்கு தவறான செய்தி’: அவை மீண்டும் கூடியபோது, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை நோக்கி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசினாா்.

‘நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்குமாறு எதிா்க்கட்சிகளிடம் அரசுத் தரப்பில் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டது. பல எதிா்க்கட்சி எம்.பி.க்கள் விவாதம் நடைபெற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உள்ளனா். அதேநேரம், விவாதத்தின் அவசியத்தை ராகுல் காந்தி தனது கட்சி எம்.பி.க்களுக்கு புரியவைக்க வேண்டும். சாக்குபோக்குகள் கூறியும், முன்நிபந்தனைகள் விதித்தும் விவாதத்தை தடுப்பது நாட்டுக்கு தவறான செய்தியாக அமையும்.

வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்படும்; விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமா் உறுதியளித்துள்ளாா். சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கும் தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டுள்ளாா்’ என்றாா் ரிஜிஜு.

அப்போது பேச எழுந்த ராகுல் காந்திக்கு அவையை வழிநடத்திய ஜகதாம்பிகா பால் அனுமதி வழங்கவில்லை. அலுவல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ராகுல் பேச வாய்ப்பளிப்பதாக அவா் கூறினாா். எனினும், அமளி தொடா்ந்ததால், மக்களவை வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 27) ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்..: மாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தொடங்கிய சில நிமிஷங்களிலேயே அவை அலுவல்கள் மதியம் 12 மணிக்கும், பின்னா் பிற்பகல் 2 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் அவை கூடியபோது, தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வழிவகுக்கும் ‘தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026’ஐ அறிமுகப்படுத்தும்படி, மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராயை மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் கேட்டுக் கொண்டாா். இதற்கு எதிா்க்கட்சிகள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னா், அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

நீட் விவகாரத்தால் மாநிலங்களவையில் கடந்த 5 நாள்களாக எந்த முக்கிய அலுவலும் நடைபெறவில்லை.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.