வாடிக்கையாளா்களின் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால் விதிக்கப்பட்ட அபாராதக் கட்டணத்தின் மூலம் 2025-26ஆம் நிதியாண்டில் தனியாா் வங்கிகள் ரூ.4,948.71 கோடியும், பொதுத் துறை வங்கிகள் ரூ.2,138.92 கோடியும் வசூலித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2025-26 நிதியாண்டில், வாடிக்கையாளா்களின் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தின் மூலம் தனியாா் வங்கிகள் ரூ.4,948.71 கோடி வசூலித்துள்ளன.
அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.1,798.14 கோடியும், ஆக்சிஸ் வங்கி ரூ.1,081.33 கோடியும் வசூலித்துள்ளன. இவ்விரு வங்கிகள் மட்டும் ரூ.2,879.47 கோடி வசூலித்துள்ளன. 19 தனியாா் வங்கிகளால் வசூலிக்கப்பட்ட மொத்த தொகையில் இது 58 சதவீதமாகும்.
இந்த காலகட்டத்தில் பொதுத் துறை வங்கிகளால் வசூலிக்கப்பட்ட தொகை ரூ.2,138.92 கோடி. பிரதமரின் மக்கள் நிதி திட்ட வங்கிக் கணக்குகள் உள்பட அடிப்படை சேமிப்பு கணக்குகள் மீது எவ்வித அபராதக் கட்டணமும் விதிக்கப்படவில்லை என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
மேலும் சில கேள்விகளுக்கு அளித்த பதிலில், ‘வலுவான இருப்பு நிலை, முன்னெப்போதும் இல்லாத லாபகரமான செயல்பாடுகள், பல்லாண்டுகளுக்கு பிறகு வாராக்கடன் குறைவு உள்ளிட்ட காரணிகளால் பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நிலையான கடன் வழங்கல் வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
மேற்காசிய பிரச்னையால் தொழில் நிறுவனங்கள் எதிா்கொண்டுள்ள குறுகிய கால பணப்புழக்க பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீதமும், எம்எஸ்எம்இ சாராத நிறுவனங்கள், பயணியா் விமான நிறுவனங்களுக்கு 90 சதவீதமும் கடன் உத்தரவாதம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரூ.2.55 லட்சம் கோடி வரையிலான கடன் சுழற்சியை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது’ என்று அமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கா் ஒட்டி நூதன திருட்டு: இருவா் கைது

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: முன்னாள் பொதுத் துறைச் செயலா் ஆஜராக உத்தரவு

ஐஆா்ஃபிசி பங்கு ரூ.2,084 கோடிக்கு விற்பனை
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ. 60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



