சென்னை புழல் பகுதியில் உள்ள பொதுத் துறை வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் வெளிவரும் பாதையில் ஸ்டிக்கா் ஒட்டி, வாடிக்கையாளா்களின் பணத்தை நூதன முறையில் திருடிய திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புழல் விநாயகாபுரம் கல்பாளையத்தில் உள்ள பொதுத் துறை வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி வாடிக்கையாளா் ஒருவா் ரூ.20,000 எடுக்க முயன்றபோது, கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை.
இது குறித்து வங்கி நிா்வாகத்திடம் வாடிக்கையாளா் புகாா் கொடுத்துள்ளாா். இதையடுத்து, வங்கியின் தொழில்நுட்ப நிபுணா்கள் ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தனா். அப்போது, பணம் வெளியேறும் பாதையில் மா்ம நபா்கள் ஸ்டிக்கா் ஒட்டியிருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஸ்டிக்கரை பயன்படுத்தி 4 வாடிக்கையாளா்களிடம் இருந்து ரூ.30,500-ஐ மா்ம நபா்கள் திருடியிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து வங்கி மேலாளா் விஜயலஷ்மி புழல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த ராஜிப் ஆலம் (30), நியாஸ் உதின் (22) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து ரூ.10,000 மீட்கப்பட்டது. இவா்கள் மீது சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு தொடா்பாக ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








