தெற்கு தில்லியில் மால்வியா நகரில் ஹௌஸ் ராணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று(ஜூன் 3) காலை 8.51 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததையடுத்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ வேகமாகப் பரவியதால் தீயை அணைக்கவும் தீயில் சிக்கியவர்களை மீட்கவும் சற்று தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தில்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பாஜக எம்எல்ஏ உபாத்யாய கூறுகையில், "இந்தச் சம்பவம் காலை 8:51 மணிக்கு நிகழ்ந்தது. நாங்கள் காலை 9 மணியிலிருந்தே இங்கு இருக்கிறோம். மிகக் குறுகிய நேரத்திற்குள்ளேயே, தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மக்களை மீட்கும் பணியில் காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் உதவினர். இதுவரை 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இது மிகவும் துயரமான ஒரு நிகழ்வாகும். அரசு அதிகாரிகள் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அரசு காவல்துறை, தீயணைப்புத் துறை சரியான நேரத்திற்கு வந்திருக்காவிட்டால், இந்தச் சம்பவத்தின் தீவிரம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தினர் மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு இருந்துள்ளனர்" என்றார்.
கட்டடத்தின் தரைத் தளத்தில் உணவகம் இயங்கி வந்துள்ளது. ஒரு அடித்தளம்(basement), தரைதளத்துடன் 6 தளங்கள் உள்ளன. தீ விபத்தினால் மேல் மாடியில் இருந்து பலர் கீழே குதித்ததாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு கால் முறிவும் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறை அதிகாரி ஏ.கே. மாலிக் இந்த விபத்து கூறியதாவது:
தீயணைப்புத் துறைக்கு காலை 8.50 மணிக்குத் தகவல் கிடைத்தது. முதலில் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. பின்னால் பல வாகனங்கள் வந்துகொண்டிருந்தன; இறுதியில் தேவைப்பட்ட அனைத்து வாகனங்களும் சம்பவ இடத்தை வந்தடைந்தன. சம்பவ இடத்தை அடைந்த உடனேயே கட்டடத்திற்குள் இருந்த 37 பேரை எங்கள் குழுவினர் மீட்டோம். இது பல அடுக்குக் கட்டடம். இதில் ஒரு அடித்தளம் (basement), தரைத்தளம் மற்றும் 5 மேல் தளங்கள் உள்ளன. சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்தக் கட்டடம் ஒரு குடியிருப்பு வளாகம் அல்ல என்பதை அறிந்தோம்.
இங்குத் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர், சாலையின் எதிர்ப்புறத்திலேயே அமைந்துள்ள 'மேக்ஸ் மருத்துவமனையில்' சிகிச்சை பெற்றுவந்த தங்கள் உறவினர்களைப் பார்க்க வந்தவர்கள் என்று தெரிகிறது. அதனால் இவர்கள் எல்லாம் இந்த கட்டடத்தில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. இங்குத் தங்கியிருந்தவர்களில் வெளிநாட்டினரும் இருக்கிறார்கள். தீ, மிக விரைவிலேயே கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. மிகக் குறுகிய நேரத்தில் தீயை அனைத்துவிட்டோம். நாங்கள் கட்டடத்தைச் முழுமையாகச் சோதித்து அங்கிருந்து வெளியேறிவிட்டோம். தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதற்காக கட்டடத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம் என்று கூறினார்.
கோடை வெய்யில் காரணமாக மின் கசிவினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி முதல்வர் ரேகா குப்தா, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் விபத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
21 Dead at hotel in Malviya Nagar, delhi, What Happened
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







