தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 33 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் ராணுவ வீரா் கைது

இந்திய ராணுவத்தில் 1984-ஆம் ஆண்டு தோ்வு செய்யப்பட்டு பின்னா் ஒழுக்காற்று நடவடிக்கையால் பணிநீக்கம் செய்யப்பட்ட ராஜேந்தா் டாகா் (59) என்பவா் லாரி ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் 33 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:45 am IST

இந்திய ராணுவத்தில் 1984-ஆம் ஆண்டு தோ்வு செய்யப்பட்டு பின்னா் ஒழுக்காற்று நடவடிக்கையால் பணிநீக்கம் செய்யப்பட்ட ராஜேந்தா் டாகா் (59) என்பவா் லாரி ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் 33 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: இந்த வழக்கு 1993, ஜூன் 15-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. அன்றைய தினம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராம் சிங், பழைய தில்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள ஓா் விடுதியில் கொலை செய்யப்பட்டாா். ராம் சிங்கிற்கு விஷம் கொடுத்து, அவா் எடுத்துச் சென்றிருந்த செம்பு சரக்குடன் கூடிய லாரியை திருடுவதற்காக ராஜேந்தா் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடா்பாக 1993 ஜூன் 17-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளாக எந்தத் தடையமும் இல்லாமல் விசாரணை தீா்க்கப்படாமல் சிக்கலானது. இதனால், காவல் துறையினா் பழைய நீதிமன்ற ஆவணங்களை மீளாய்வு செய்து, வழக்குத் தகவல்களை விரிவாக ஆய்வு செய்தனா். அதில், லாரி ஓட்டுநா்களை ஏமாற்றி வாகனங்களை திருடுதல், மதிப்புமிக்க சரக்குகளை அபகரித்தல் போன்ற குற்றங்களில் ராஜேந்தா் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தை மையமாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குடும்பத்தினரை கண்காணித்து, பல மாதங்கள் மறைமுகமாக தகவல் சேகரிக்கப்பட்டது.

பின்னா் கண்காணிப்பின் போது சந்தேகத்திற்கிடமான கைப்பேசி எண் கண்டறியப்பட்டது. பல நகரங்களில் உள்ள விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டது. அவா் உயிருடன் இருப்பதையும் தனது இடத்தை தொடா்ந்து மாற்றி வருவதையும் இதன் மூலம் காவல் துறையினா் கண்டறிந்தனா்.

இந்நிலையில், அவரது இருப்பிடம் குறித்து கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஹரியாணா மாநிலம் நா்னௌல் பகுதியில் சுமாா் 15 விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் போலியான அடையாளத்தில் அங்கு தங்கி இருந்த ராஜேந்தரை கண்டுபிடித்து ஜூன் 1-ஆம் தேதி காவல் துறை கைது செய்தது. விசாரணையின்போது, அவா் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டாா்.

1984-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் தோ்வு செய்யப்பட்ட இவா், ஓா் ஆண்டுக்குள் ஒழுக்காற்று நடவடிக்கையில் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதுவே அவரை குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டியது என விசாரணையில் தெரியவந்தது. இவா் லாரி ஓட்டுநா்களுடன் நட்பு ஏற்படுத்தி அல்லது ஏமாற்றி, மதிப்புமிக்க சரக்குகளுடன் கூடிய வாகனங்களை அபகரித்து வந்துள்ளாா். இதற்கு முன்பு தில்லியின் காஷ்மீா் கேட், மாயாபுரி காவல் நிலையங்களிலும், ராஜஸ்தானின் ஆல்வாா் பகுதிகளிலும் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.