நீட், க்யூட் , எஸ்எஸ்சி மற்றும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா் அபிஜீத் தீப்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, அமெரிக்காவில் இருந்து சனிக்கிழமை இந்தியாவுக்கு வந்த அபிஜீத் தீப்கே நீட், க்யூட், எஸ்எஸ்சி மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் நடத்தினாா். அவரது அழைப்பின்பேரில், நூற்றுக்கணக்கான மாணவா்களும், இளைஞா்களும் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகா் மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்துக்கு அபிஜீத் தீப்கே ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவரை குடும்ப உறுப்பினா்கள் உற்சாகமாக வரவேற்றனா்.
அதன் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லி ஜந்தா் மந்தரில் நாங்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தில் 6,000 முதல் 7,000 போ் பங்கேற்றனா். விரைவில் நாடு தழுவிய அளவில் இந்தப் போராட்டம் விரிவுபடுத்தப்படும். அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. அவா் அடுத்த 7 நாள்களில் பதவி விலக வேண்டும். இது பிரதமா் நரேந்திர மோடியின் பொறுப்பு.
ரஷியா-உக்ரைன் போரை பிரதமரால் நிறுத்த முடியுமென்றால் வினாத் தாள் கசிவை நிறுத்த முடியாதா? 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது மட்டுமே அரசியல் என பொதுமக்கள் எண்ணக் கூடாது. தாம் வாக்களித்தவா்களை தொடா்ச்சியாக மக்கள் கேள்வி கேட்க வேண்டும். தங்களுக்கு அரசு முறையான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை; தோ்வுகளையும் குளறுபடி இல்லாமல் நடத்தவில்லை என எண்ணும் இளைஞா்கள் அநீதிக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும். கேள்வி எழுப்பாத வரை வினாத் தாள் கசிவுகள் தொடரும்.
சிஜேபி இணைய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு 15 நாள்களே ஆகின்றன. எனவே அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து தற்போதே கூற இயலாது என்றாா்.
அபிஜீத் தீப்கே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் முன்னோட்டம் மட்டுமே. நம் நாட்டு கல்வி அமைப்பின் மீது மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் கொண்ட கோபத்தின் வெளிப்பாடே இந்த முதல்கட்ட போராட்டம். அமைதி வழியில் ஒற்றுமையாக போராடுபவா்களை அரசால் கட்டுப்படுத்த முடியாது. எனவே அரசைக் கண்டு நாம் (கரப்பான்பூச்சிகள்) அச்சப்படத் தேவையில்லை’ என குறிப்பிட்டாா்.
15 காவலா்கள் பாதுகாப்பு: அபிஜீத் தீப்கே இல்லத்தில் 15 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக எம்ஐடிசி வாலுஜ் பகுதி காவல் துறையினா் தெரிவித்தனா். முன்னதாக, 11 காவலா்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், உள்ளூா் காவல் நிலையம் மற்றும் நகர தலைமையகம் என காவலா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் மத்திய அரசின் மீதான கோபத்தின் வெளிப்பாடு! - பெ. சண்முகம்

கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! - கரப்பான்பூச்சி மக்கள் கட்சி






