மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

Published On :

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு அவர் இரு தலைவர்களையும் சந்திப்பது இது முதல் முறையாகும்.

முன்னதாக, மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக தில்லிக்கு தனி விமானத்தில் புதன்கிழமை பகல் 12 மணியளவில் முதல்வர் ஜோசப் விஜய் வந்தார். அதைத் தொடர்ந்து, தில்லி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் அவரை சம்பிரதாயப்படி தமிழக அரசின் தலைமைச் செயலர் மு. சாய்குமார், தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ஆர். ஜெயா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கு தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஜோசப் விஜய் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர், மாலை 4.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிஷங்கள் நீடித்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலை 5.30 மணியளவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை அவரது மாளிகையில் முதல்வர் சந்தித்தார். அவருக்கு குடியரசு துணைத் தலைவர், நடராஜர் சிலை அடங்கிய கண்ணாடிப் பேழையை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் 45 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா ஆகியோரை முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துப் பேசிவிட்டு தமிழ்நாடு இல்லம் திரும்பினார். முதல்வரின் வருகையை முன்னிட்டு தில்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இன்று நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு: தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 11) நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார். அந்த நிகழ்வு பிற்பகல் வரை நடைபெறும் என்பதால் அங்கு சில மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற மாநில முதல்வர்களை மரியாதை நிமித்தமாகவும், அலுவல்பூர்வமற்ற வகையிலும் முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதித் தேவைகள் குறித்து விரிவாக முதல்வர் ஜோசப் விஜய் பேசுவார் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் பிரதமர் அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை பகலில் தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் பெங்களூரு வழியாக சென்னை திரும்புவார் என்று தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர்கள் வரவில்லை: முதல்வர் ஜோசப் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடந்த மே 27-ஆம் தேதி தில்லிக்கு வந்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழக நலன்கள் சார்ந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவைக் கோரிவிட்டு சென்னை திரும்பினார். இதையடுத்து, தற்போது முதல்வர் ஜோசப் விஜய் இரண்டாவது முறையாக தில்லிக்கு வந்துள்ளார்.

இதற்கு முன்பு தமிழக முதல்வராக இருந்தவர்கள் தில்லி வரும்போது அவர்களுடைய கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், மாநிலத்தின் சில அமைச்சர்களையும் உடன் அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரதிகாரிகளுடன் மட்டும் தில்லி வந்துள்ளார். அவருக்கு நெருக்கமான சிலர் நீங்கலாக வேறு அமைச்சர்கள் எவரும் முதல்வரின் தில்லி பயணத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரகஜா, குங்குமத்துடன் முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரை முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்தபோது, அவர் "அரகஜா' எனப்படும் திலகத்துடன் காணப்பட்டார். ஹிந்து மதத்தில் இது புனிதமானதாகக் கருதப்படுவதுடன் சநாதன வழிபாட்டு முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில், சோனியா, ராகுல் காந்தியைச் சந்தித்தபோது, முதல்வர் ஜோசப் விஜய் சிவப்பு நிற குங்கும திலகத்தை வைத்திருந்தார். இந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.

Tamil Nadu Chief Minister C. Joseph Vijay met President Droupadi Murmu in Delhi today (June 10).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.