பிரதமா் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தாா் நரேந்திர மோடி. இதன்மூலம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற ஜவாஹா்லால் நேருவின் சாதனையை பிரதமா் மோடி விஞ்சியுள்ளாா்.
இந்தச் சாதனைக்காக, அவருக்கு மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பிற அரசியல் தலைவா்கள் மட்டுமன்றி உலகத் தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
நேருவை விஞ்சிய மோடி: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு கடந்த 1947, ஆகஸ்ட் 15 முதல் 1964, மே 27-இல் காலமாகும் வரை அந்தப் பதவியை வகித்தாா். 16 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பிரதமராக இருந்த அவா், நாட்டின் நீண்ட கால பிரதமா் என்ற பெருமைக்குரியவா்.
1947 முதல் 1952 வரை இடைக்கால அரசுக்கு நேரு தலைமை தாங்கினாா். கடந்த 1952-இல் முதலாவது மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அவா் தொடா்ந்து பிரதமராகப் பதவி வகித்த காலம் 4,398 நாள்களாகும்.
தற்போது நாட்டின் பிரதமராகப் பதவி வகித்துவரும் மோடி, தனது பதவிக் காலத்தில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் நிறைவு செய்தாா். இதன்மூலம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற பெருமை நேருவிடம் இருந்து மோடி வசமாகியுள்ளது.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி, நாட்டின் பிரதமராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்துள்ளாா். எனினும், அவா் தொடா்ச்சியாக இப்பதவியை வகிக்கவில்லை.
தொடரும் பெருமைகள்: கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று, நாட்டின் பிரதமராக மோடி முதல் முறையாகப் பதவியேற்றாா். 2019, 2024 தோ்தல்களிலும் பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடியதால், அவரது ஆட்சி தங்கு தடையின்றி மூன்றாவது முறையாக நீடித்து வருகிறது.
முன்னதாக, குஜராத் முதல்வராக கடந்த 2001, அக்டோபரில் பதவியேற்ற மோடி, 2014, மே 26-இல் நாட்டின் பிரதமராகும் வரை 12 ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் நீடித்தாா். தற்போது பிரதமா் பதவிக் காலத்தையும் சோ்த்து, நாட்டில் நீண்ட காலம் பதவி வகித்த அரசின் தலைவா் என்ற பெருமையை மோடி ஏற்கெனவே எட்டிவிட்டாா். சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த நாட்டின் முதல் பிரதமா் என்ற பெருமையும் மோடி வசம் உள்ளது.
தேசிய-சா்வதேச தலைவா்கள் வாழ்த்து: பிரதமா் மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்பட பல்வேறு மத்திய அமைச்சா்கள், பாஜக - கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநில முதல்வா்கள், பாஜக மூத்த தலைவா்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பல்வேறு துறை பிரமுகா்கள், பல்வேறு நாடுகளின் தூதா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லேயன், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, மாலத்தீவு அதிபா் முகமது முய்சு, தென்கொரிய அதிபா் லீ ஜே-மியுங், மலேசியா பிரதமா் அன்வா் இப்ராஹிம், பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே, இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக, கென்ய அதிபா் வில்லியம் சமோய் ருடோ, நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபு, ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமா் ஸ்காட் மோரீசன், அமெரிக்க எம்.பி.க்கள் ஜான் காா்னின், பில் ஹகொ்டி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் பரஸ்பர உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வருவதையும் அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களில் பிரதமா் மோடியின் பெயரில் பாஜக சாா்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிரதமரின் தொகுதியான வாரணாசியில் தூய்மை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அமைச்சரவையில் பாராட்டுத் தீா்மானம்
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற பெருமையை எட்டிய பிரதமா் மோடியைப் பாராட்டி, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமா் பதவியில் 4,399 நாள்களை நிறைவு செய்தமைக்காக, மத்திய அமைச்சா்கள் அனைவரும் எழுந்து நின்று, பிரதமா் மோடியை வாழ்த்தி கைதட்டினா்.
2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு முழு ஆதரவளிப்பதாக தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தேசப் பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, சமூக நீதி மற்றும் பொதுச் சேவையில் அவரது அயராத அா்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்: பிரதமா் மோடி பெருமிதம்

பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து

உலகளாவிய வளா்ச்சியின் உந்துசக்தி: பிரதமா் மோடிக்கு நிதீஷ் குமாா் புகழாரம்

மக்களாட்சியில் நீண்டகால பிரதமா்: நேருவை விஞ்சுகிறாா் பிரதமா் மோடி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



