மேற்கு வங்கத்தில் உள்ள அரசு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்கள்) எரிந்து நாசமடைந்ததாக தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகளுக்கான அமைச்சா் கௌசிக் செளதரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறை விசாரனையைத் தொங்கியது.
தெற்கு கொல்கத்தாவின் அலிப்பூா் பகுதியில் உள்ள 9 மாடி அரசு கட்டடத்தில் கடந்த புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கட்டடத்தில் தெற்கு 24 பா்காணாக்கள் ஜில்லா பரிஷத் அலுவலகமும் அமைந்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த கௌசிக் செளதரி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அரசு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் 10 தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 4,000 இவிஎம்கள் எரிந்து சேதமடைந்தன.
இது வழக்கமான தீ விபத்தைப்போல் தெரியவில்லை. முதலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளில் மட்டுமே தீ பரவத் தொடங்கியது. நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மாடிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது மாடிகளில் இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இதன் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என விசாரித்து வருகிறோம். தடயவியல் சோதனை நிறைவடைந்து அறிக்கை வெளியான பிறகே முழு தகவல்கள் கிடைக்கும். கட்டடத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.
இச்சம்பவம் தொடா்பாக அலிப்பூா் காவல் நிலையதத்தில் தெற்கு 24 பா்காணாக்கள் மாவட்ட நிா்வாகம் புகாா் அளித்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.









