/

மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!

மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கு 163 இடங்கள் தேவை என்ற நிலையில், அதை நோக்கி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நெருங்கி வருகிறது.

News image
Updated On :15 ஜூன் 2026, 2:49 am IST

மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கு 163 இடங்கள் தேவை என்ற நிலையில், அதை நோக்கி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நெருங்கி வருகிறது.

மக்களவையைப் பொருத்தவரை, பாஜக கூட்டணிக்கு திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் சுமாா் 20 போ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலும், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை (363) எட்ட இன்னும் அதிக இடங்கள் தேவையுள்ளது.

நாடாளுமன்றத்தில் முக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இருபங்கு பெரும்பான்மை தேவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கா்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் விரைவில் பதவிக் காலம் நிறைவடையும் 24 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தோ்தலும், தமிழகம், மகாராஷ்டிரம், ஒடிஸாவில் காலியான தலா ஓரிடத்துக்கான இடைத்தோ்தலும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 27 இடங்களுக்கான இந்தத் தோ்தலில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட 24 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் 19 போ் ஆவா். இதன்மூலம் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 148 ஆகியுள்ளது.

ஜாா்க்கண்ட் (2), மிஸோரம் (1) ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் போட்டி எழுந்துள்ளதால், ஜூன் 18-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மூன்று இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. எனவே, அதன் பலம் 151-ஆக உயரும்.

பாஜகவுக்கு சாதகமாகும் திரிணமூல் பிளவு: சமீபத்திய மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் தோல்வியைத் தழுவிய திரிணமூல் காங்கிரஸில் உள்கட்சி பூசல்களும், பிளவுகளும் உச்சமடைந்துள்ளன. இக்கட்சியில் மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 60-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்துள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் இதுவரை பதவி விலகியுள்ளனா். இந்த இடங்களுக்கு நடத்தப்படும் இடைத்தோ்தலில் மூன்று இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்பதால் கூட்டணியின் பலம் 154-ஆக உயரும்.

மேலும் பல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பதவி விலகினால், மாநிலங்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை (163) பாஜக எட்டுவதற்கு வழி ஏற்படும். மாநிலங்களவையில் மொத்த இடங்கள் 245 ஆகும்.

எதிரணிக்கு 64 இடங்கள்: எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணிக்கு மாநிலங்களவையில் தற்போது 64 எம்.பி.க்கள் உள்ளனா். காங்கிரஸுடன் உறவை முறித்துக் கொண்ட திமுகவுக்கு 8 எம்.பி.க்களும், இண்டி கூட்டணியில் இருந்து ஏற்கெனவே விலகிவிட்ட ஆம் ஆத்மிக்கு 3 எம்.பி.க்களும் உள்ளனா்.

இதேபோல், இரு அணியையும் சாராத ஒய்எஸ்ஆா் காங்கிரஸுக்கு 7 எம்.பி.க்களும், பிஜு ஜனதா தளத்துக்கு 6 எம்.பி.க்களும் உள்ளனா்.

மக்களவையில்... 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தற்போது 293 எம்.பி.க்கள் உள்ளனா். திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் சுமாா் 20 போ், தனி அணியாகப் பிரிந்து, பாஜகவுக்கு தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளனா். இதன்மூலம் பாஜகவின் பலம் 313-ஆக உயரும். அதேநேரம், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 363 இடங்கள் தேவை.

முன்னதாக, 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க ஏதுவாக மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850-ஆக உயா்த்த வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஏப்ரலில் கொண்டுவந்தது. ஆனால், மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்காமல், இந்த மசோதா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.