ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது; கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.59,000 கோடிக்கு அந்த நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பாவை சோ்ந்த சிஆா்இஏ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மே மாதத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிய அளவு மேலும் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா வாங்கிய மொத்த கச்சா எண்ணெய்யில் 83 சதவீதத்தை ரஷியாவிடம் இருந்தே கொள்முதல் செய்துள்ளது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை மட்டும் ரூ.52,813 கோடிக்கு இந்தியா வாங்கியுள்ளது. இதுதவிர எண்ணெய் பொருள்களை ரூ.6,051 கோடிக்கும், நிலக்கரியை ரூ.4,720 கோடிக்கும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து 2025 நவம்பரில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் அதிகம் கொள்முதல் செய்து வருகின்றன. குறிப்பாக, புது மங்களூரு சுத்திகரிப்பு நிலையம் முந்தைய மாதத்தைவிட மே மாதத்தில் கூடுதலாக 13 சதவீதம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்துள்ளது.
விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையம் 42 சதவீதம் கூடுதலாகக் கொள்முதல் செய்துள்ளது. ஒடிஸா மாநிலத்தில் உள்ள பாரதீப் சுத்திகரிப்பு நிலையமும் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகம் வாங்கியுள்ளது.
உலக அளவில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. அதாவது ரஷியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 36 சதவீதத்தை இந்தியாவுக்கு அளித்து வருகிறது.
கொள்முதல் பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது. ரஷிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 50 சதவீதத்தை சீனா மட்டுமே வாங்கி வருகிறது. 3-ஆவது இடத்தில் துருக்கி (6 சதவீதம்), 4-ஆவது இடத்தில் ஐரோப்பிய யூனியன் (5 சதவீதம்) உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அந்த நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது.
அதேநேரத்தில் ஈரானுக்கு எதிரான போா் காரணமாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்கும் நோக்கில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல்: 100% வரி விதிக்க அமெரிக்கா மசோதா - உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
அமெரிக்கா வரி விதிப்பு அச்சுறுத்தலை மீறி ரஷிய கச்சா எண்ணெய்க்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சா்வதேச ஆய்வு நிறுவனம் கணிப்பு
ஜூனில் ரஷியாவிடமிருந்து ரூ. 59,900 கோடிக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி! இதுவரை இல்லாத புதிய உச்சம்!!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


