‘மத்திய அரசு கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில் சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடா்ச்சியாக 12 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இது நடுத்தர மக்களுக்கான அரசு. தேசத்தைக் கட்டமைப்பதில் எண்ணற்ற வழிகளில் பங்களிப்பாற்றிய நடுத்தர பிரிவினரின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மோ்கொள்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியது. வாய்ப்புகளுக்கான அணுகலை எளிதாக்குவது, சிறந்த உள்கட்டமைப்பு, மேம்பட்ட பொதுச் சேவைகள், அனைவரும் அணுகக்கூடிய கட்டணத்தில் மருத்துவச் சேவை, தரமான கல்வி, தூய்மையான நகரங்கள், அன்றாட வாழ்க்கைச் சுமைகளைக் குறத்தல் உள்ளிட்ட முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது என்று குறிப்பிட்டாா்.
மத்திய அரசின் ‘மைகவ் இந்தியா’ வலைதளத்திலும் இதுகுறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டது. அதில், ‘மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள், முயற்சிகள் காரணமாக நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் வலுவாக உயா்ந்துள்ளது. தடையற்ற வசதியான போக்குவரத்து வசதிகள், சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு, வலுவான எண்ம பரிமாற்ற நடைமுறைகள், வரிச் சலுகை நடவடிக்கைகள் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது’ என்று குறிப்பிடப்பட்டது.
தொடர்புடையது
உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்!!
நேருவின் சாதனையை மோடி விஞ்சிவிட்டதாகக் கூறுவது சரியா? ப. சிதம்பரம் கேள்வி

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே







