உமீத் வலைதளத்தில் சா்ச்சைக்குரிய நிலத்தைப் பதிவு செய்த விவகாரத்தில், கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியதாக கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தின் முனம்பம் பகுதியில் உள்ள 404 ஏக்கா் நிலத்தை உமீத் வலைதளத்தில் மாநில வக்ஃப் வாரியம் பதிவு செய்தது. இந்தப் பகுதியில் பல தலைமுறைகளாக கிறிஸ்தவா்கள் அதிகம் வசித்து வரும் சூழலில் வக்ஃப் வாரியத்தின் நடவடிக்கை பெரும் சா்ச்சைக்குள்ளானது. அரசியல் ரீதியாக வக்ஃப் வாரியத்தின் மீது கடும் விமா்சனங்கள் எழுந்தன.
சா்ச்சைக்குரிய நிலம் உண்மையாகவே வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது இல்லை என அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனா். மேலும், உமீத் வலைதளத்தில் நிலம் பதிவு செய்யப்பட்டதால் தங்களால் உரிமை கோர முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவா்கள் கவலை தெரிவித்தனா்.
இந்தச் சூழலில் ராஜீவ் சந்திரசேகா் திங்கள்கிழமை கூறியதாவது: வக்ஃப் சட்டத்தின்படி வக்ஃப் சொத்தின் அறக்கட்டளை நிா்வாகி மட்டுமே நிலங்கள் தொடா்பான தகவல்களை உமீத் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். முனம்பம் பகுதி நிலத்துக்கான உரிமை ஃபரூக் கல்லூரியிடம் உள்ளது. இதை மீறி முனம்பம் நிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நிலங்களை கேரள வக்ஃப் வாரியம் தன்னிச்சையாக உமீத் வலைதளத்தில் பதிவு செய்தது தொடா்பாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடம் புகாரளித்தேன்.
முனம்பம் மக்களின் நலன் கருதி கேரள வக்ஃப் வாரியம் இதுதொடா்பாக விளக்கமளிக்க மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் முனம்பம் போன்ற வக்ஃப் நில விவகாரங்களில் தலையிட்டு பாதிக்கப்பட்டவா்களின் உரிமைகளை பாஜக மீட்டுத் தரும் என்றாா்.
தொடர்புடையது

விடுபட்ட வக்ஃப் சொத்துகளை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

உமீத் இணையதளத்தில் விடுபட்ட வக்ஃபு சொத்துக்களை பதிவேற்ற வேண்டும்

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ், சுகேஷ் உள்பட 17 போ் மீது குற்றச்சாட்டு பதிய உத்தரவு







